சென்னை, ஆக. 22: அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக 40 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராமச்சந்திரன் (தளி) "பல தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் தனியார் நிறுவனம் நடத்தும் பள்ளி ஒன்றில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தும் மாணவர்களுக்கும் பகுதி நேர வகுப்புகளும், அதிகக் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு முழுநேர வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. உயர் நீதிமன்றமே அதைக் கண்டித்துள்ளது. இதுபோன்ற பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். அப்போது குறுக்கிட்டு அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது: தனியார் பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி சிங்காரவேலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் வசூலிப்பதாக இக்குழுவுக்கு 444 புகார்கள் வந்துள்ளன. அரசுக்கு நேரடியாக 40 புகார்கள் வந்துள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் புகார் கூறப்பட்டுள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு நேரடியாக வந்துள்ள புகார்களின் அடிப்படையில் 40 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
Thanks: Dinamani
Thanks: Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக