மதுரை : அவமதிப்பு வழக்கில் ஆக. 29ல் ஆஜராகும்படி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பி.ஆர்.ஆசிரியர் பயிற்சி பள்ளி தாளாளருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.நத்தம் மீனாட்சி புரத்தை சேர்ந்த வசந்தா சுஜாதா தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு: பி.ஆர்.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் டிப்ளமோ படித்தேன். கட்டணத்தை முழுமையாக செலுத்தி பயிற்சியை முடித்தும், சான்றிதழ்கள் வழங்கப் படவில்லை. தாளாளர் சிவக்குமார், முதல்வர் தாமரை செல்வியை சந்திக்க முயன்றும், முடியவில்லை. ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி மைய இயக்குனருக்கு மனு செய்தேன். அவரும், சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டார். பின், ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். தனி நீதிபதி, சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டார். சான்றிதழ்களை வழங்க தாளாளர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது தடைபட்டது. கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத தாளாளர், முதல்வர் மீது அவமதிப்பு பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி எஸ்.மணிக் குமார் முன் மனு விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் ஸ்டிரைக் காரணமாக மனுதாரர் ஆஜராகி வாதாடினார். பள்ளி முதல்வர் மட்டும் ஆஜரானார். மனுதாரர் கல்லூரிக்கு வரவில்லை என முதல்வர் தெரிவித்தார். ஆனால் கல்லூரிக்கு சென்றதற்கான என்ட்ரி பாஸ்களை மனுதாரர் காட்டினார். விசாரணை முடிவில், சான்றிதழ் களை வழங்க முதல்வர் முன்வந்தார். நீதிபதி முன்னிலையில் சான்றிதழ்கள் மனுதாரரிடம் வழங்கப் பட்டன. விசாரணையில் தாளாளர் ஆஜராக வில்லை. இதனால் ஆக.29ல் தாளாளர் ஆஜராக நீதிபதி உத்தர விட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக