ஆசிரியர் என்பவர் கற்பிப்பவர்; குரு என்பவர், கற்று வழி நின்று, மாணவருக்கு வழிகாட்டுபவர். "எங்கு நடப்படுகிறாயோ, அங்கு மலராகு' என்பது பொன் மொழி.குறிக்கோள் இல்லாத மாணவ வாழ்க்கை, முகவரியில்லா கடிதத்திற்கு சமம். அவர்களின் எதிர்காலம், ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்பத்திலிருந்தே, மாணவர் மனதில் பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை காணும் போது, ஆசிரியரின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றும். இதை சொல்வதை விட, உணர்வு பூர்வமாக உணர முடியும்.தன்னிடம் பயிலும் மாணவர்களை, நல்ல மாணவர்களாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும், ஆசிரியரைச் சேரும்.
ஒரு சிறந்த ஆசிரியரின் பண்புகள், குணங்கள், முகம் பார்க்கும் கண்ணாடியாக மனதில் பதியும். அவர்கள், ஓர் காலக் கண்ணாடி.ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்களின் உழைப்பை, அதிகம் பாராட்ட வேண்டும். ஆரம்பக் கல்வி பயில வரும் குழந்தைகளிடம், பொறுப்பும், சகிப்புத் தன்மையும், அன்பும், அரவணைப்பும் மிகவும் தேவை.அவர்களை அடித்தோ, மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது; அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் ஏறாது. மழலைச் செல்வங்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது, ஆசிரியரும், குழந்தையாகவே மாற வேண்டும். அவர்களின் மழலைப் பேச்சும், சிரிப்பும், புதியதோர் உலகிற்கு சென்ற உன்னத உணர்வு, மனதில் ஏற்படும்.கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதிலுள்ள மகிழ்ச்சி, சற்று வித்தியாசமானது. அங்கு பயிலும் மாணவன், எத்தகைய உயர்நிலைக்குத் தான் சென்றாலும், ஆசிரியரையும், அப்பள்ளியையும் மறப்பதில்லை.
மாறுபட்ட குணங்கள், தோற்றங்கள், நடத்தைகள், சிந்தனைகள் என்ற, இனிய கலவை அனைத்தும், ஒரே இடத்தில் காணலாம். அதுதான் வகுப்பறை.அர்ச்சுனனுக்கு ஒரு துரோணாச்சாரி போல, கொள்ளை, கொலை பல புரிந்து வந்த திருடனை, "ராமாயணம்' என்ற வரலாற்றுக் காவியத்தை படைக்கும் அளவிற்கு, வால்மிகி உருவாகக் காரணமான ஒரு நாரதரைப் போல, விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல, ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு வாழ்வியல் ஆசான்கள், இன்றும் இருக்கின்றனர்.நாட்டின் எதிர்காலம், வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
சிறந்த ஆசிரியர் என்பவர், சொல்லுக்கும், செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். அப்போது தான் ஆசிரியப் பணி சிறக்கும்.மாணவர்களை சிறந்த பண்பாளராக ஆக்க முயலும் ஆசிரியர்கள், முதலில் சிறந்த பண்பாளராக இருக்க வேண்டும். ஒரு சிலரின் தகாத செயல்களால் தற்போது, ஒட்டு மொத்த ஆசிரிய சமூகத்திற்கே, தலைக்குனிவு ஏற்படுகிறது. வகுப்பறையில் சரியாக சொல்லித் தராத ஆசிரியர்கள் சிலர், தன்னிடம் வந்து, டியூஷன் படிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். இது தவறல்லவா?ஒரு ஆசிரியர் தவறு செய்தால், எட்டாத அளவிற்கு, எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்பதை, கருத்தில் கொள்ள வேண்டும். இதை உணர்ந்து செயல்பட்டால், ஆசிரியர் பணி செழிக்கும்; நாடு சிறக்கும்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். டாக்டர், இன்ஜினியர் என்று சொல்வதில்லை. தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல், "அன்னையும், தந்தையும் குழந்தையை உலகிற்கு தருகின்றனர்; ஆனால், ஒரு நல்ல ஆசான், இவ்வுலகத்தையே குழந்தைக்கு தருகிறான்!'பிறநாடுகளில் இந்த அளவிற்கு, மாணவர் மீது, அக்கறை காட்ட மாட்டார்கள் என்கின்றனர்.
தன்னைத் தட்டிக் கேட்பதையோ, கண்டிப்பதையோ, இப்போதுள்ள மாணவர்கள் விரும்புவதில்லை. சுயகவுரவம் பாதிக்கப்படுவதாக எண்ணி, தகாத வழியில் செல்கின்றனர்.
"அடிக்க ஒரு கை, அணைக்க ஒரு கை' என்பர். தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது; தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி
ஆகணும்."பாதை தவறிய கால்கள், விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை' சிந்தியுங்கள். அன்று, உங்களின் கரம் பிடித்து, கரும்பலகையில் எழுத வைத்ததால் தான், இன்று கணினி முன், கம்பீரமாய் உட்கார்ந்து கடமையாற்ற முடிகிறது.
இதை மறவாதீர்.ஒரு சாதாரணக் குடியில் பிறந்து, கல்வி கற்று, ஆசிரியப் பணியை ஆர்வமுடன் ஏற்று, அதைச் செவ்வனே முடித்து, இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று, "பாரத ரத்னா' என்ற மகுடத்தை சூட்டிக் கொண்டவர், டாக்டர் ராதாகிருஷ்ணன். இப்பெறற்கரிய பேற்றை, சாதனையை, இதுவரை யாரும் பெறவில்லை. ஒவ்வொரு இந்தியனும், இதுகுறித்து, பெருமிதம் கொள்ள வேண்டும். ஞானத்தின் சுடரை ஏற்றுகிற இப்பணியை, நன்றியுடன் நினைவு கூறுவோம்.ஆசிரியரிடம் கற்ற பாடங்களே, மாணவர்களுக்கு உந்து சக்தியாக மாறி வழிகாட்டுகிறது. வேறு எந்த துறையைக் காட்டிலும், அதிக பொறுப்புகளும், முக்கியத்துவமும் வாய்ந்தது, ஆசான்களின் பயணம்.
மண் கலவையை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பதில் கை தேர்ந்தவர்கள், "குடத்துள் விளக்காய்' இருக்கும், மாணவரின் திறமையை வெளிக்கொணர்ந்து, "குன்றின் மேலிட்ட விளக்காய்' பிரகாசிக்க செய்வது, ஆசிரியரின் தனிச்சிறப்பு.அரிஸ்டாட்டில், தம் மாணாக்கர் பலருடன், ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களிடம், "நீங்கள் இங்கேயே நில்லுங்கள். ஆற்றில் சுழல் உள்ளதா என பார்த்து வருகிறேன்...' எனக் கூறி ஆயத்தமானார். அதற்குள் ஒரு மாணவன், நீரில் இறங்கி நீந்தி, அக்கரைக்குச் சென்றான்."குருவே சுழல்கள் இல்லை, தைரியமாய் ஆற்றை கடக்கலாம் வாருங்கள்...' என்றான். அரிஸ்டாட்டில், "உன்னைச் சுழல்கள் இழுத்துச் சென்றால், என்னவாகி இருக்கும்?' என்றார்.அதற்கு அம்மாணவன், "ஆயிரம் அரிஸ்டாட்டில்களை உருவாக்கும், வல்லமை பெற்றவர் நீங்கள். அரிதான குருவான உங்களை இழந்தால், நாங்கள் பரிதவித்துப் போய் விடுவோம்' என்றான். அப்படி ஓர் அற்புதமான ஆசிரியர், மாணவர் உறவு அமைவது, சமூகத்திற்கு புது சுவாசத்தை கொடுக்கும்.
மாணவ, மாணவியருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்... சுற்றுப்புறமும், சூழ்நிலையும், கூடாத
நட்பும் தான், ஒருவனை குற்றவாளியாக்குகிறது. இளமையிலிருந்தே அன்பு, கருணை, பணிவு, பக்தி, ஒழுக்கம், நேர்மை, தன்னம்பிக்கை, பொறுமை, அடக்கம், சிறந்த நட்பு, பிறரை மன்னித்தல், விடா முயற்சி, பெற்றோரைப் பணிதல், ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து நடத்தல், சுற்றத்தாரை மதித்தல் ஆகிய, நற்பண்புகளை, பின்பற்றி நடந்தால், பெற்றோருக்கு நல்ல மகனாக, நல்லாசிரியருக்கு சிறந்த மாணாக்கனாக, அவனது சமூகத்திற்கே உயர்ந்த குடிமகனாக விளங்க முடியும்.
நாம் மனிதனாகப் பிறந்ததே, சாதிப்பதற்காகத் தான் என்ற எண்ணம், மேலோங்க வேண்டும். தோல்வியைக் கண்டு துவளாமல், சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
பள்ளியையோ, கல்லூரியையோ விட்டு வெளியேறும் போது, "இவ்வளவு சிறந்த ஆசிரியர்களைப் பிரிகிறோமே...' என, மாணவரும், "நல்ல மாணவர்கள், நம்மை விட்டு செல்கின்றனரே...' என, ஆசிரியர்களும், நினைத்துப் போற்றும் வண்ணம், பசுமை நிறைந்த நினைவுகளோடு, வெற்றி நடை போட்டு வாருங்கள்.உலகில், தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்பவர், என்றும் நிலைத்து நிற்பர். இந்த வரிசையில் ஆசிரியர்களுக்குத் தான்,முதல்இடம்என்பதுயதார்த்தஉண்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக