சென்னை : முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், சென்னையில் நேற்று நடந்தது. இதில், 1,100 பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு செய்யப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 2,612 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,305 பணியிடங்கள், தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது.
பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி தலைமையில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலிங்கை நடத்தினர். காலையில், காலியிட விவரங்கள் அடங்கிய பட்டியல்கள், மாவட்ட வாரியாக, பள்ளியின் முகப்பில் வெளியிடப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில், பாட வாரியாக, ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு, முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு செய்து, அதற்கான உத்தரவுகளை, ராஜராஜேஸ்வரி வழங்கினார்.
நேற்று ஒரே நாளில், 1,100 பேர், பதவி உயர்வு ஆணைகளைப் பெற்றனர். மீதமுள்ள காலிப் பணியிடங்கள், நேரடிப் பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. பொறுப்பேற்பு: இதற்கிடையே, பள்ளிக் கல்வித் துறையில், மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக இருந்து வந்த ராஜராஜேஸ்வரி, பணியாளர் தொகுதி இணை இயக்குனராக, நேற்று மாற்றம் செய்யப்பட்டார். நேற்று, பிற்பகலில், புதிய பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டார்.
பணியாளர் தொகுதியில் இருந்த பழனிச்சாமி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் பொறுப்பேற்றுக் கொண்டார். மற்ற அதிகாரிகளில் சிலர் இன்றும், சிலர் திங்கட்கிழமையும் பொறுப்பேற்கத் திட்டமிட்டுள்ளனர்.
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக