ப
ழைய பாடத்திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள், பாடநூல் கழகம் மற்றும் ஆந்திர மாநில அச்சகங்களின் குடோன்களில், மக்கி வருகின்றன. அச்சிட்ட நிறுவனங்களுக்கு பணம் வழங்கப்படாததால், அச்சக உரிமையாளர்கள் புலம்பி தவிக்கின்றனர்."சமச்சீர் கல்வித் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, ஏற்கனவே தயாராக அச்சிடப்பட்டிருந்த சமச்சீர் கல்வி புத்தகங்களில், சில பகுதிகளை நீக்கி, நடப்பு கல்வியாண்டில் வினியோகிக்கப்பட்டன.
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, பழைய பாடத்திட்டத்தின் கீழ், அவசரம் அவசரமாக 200 கோடி ரூபாய் செலவில், தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள அச்சகங்களில், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக, இந்த பாடப் புத்தகங்கள் அப்படியே குடோன்களில் தேங்கி, வீணாகி வருகின்றன.புத்தகங்களை என்ன செய்வது என, தமிழக அரசு, எந்த முடிவும் எடுக்கவில்லை; அதே நேரத்தில், பாடப் புத்தகங்களை அச்சிட்ட உரிமையாளர்களுக்கும், இதுவரை பணம் வழங்கவில்லை. இதனால், அச்சக உரிமையாளர்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.
புலம்பல்:
இதுகுறித்து, அச்சக உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:பாடப் புத்தகங்கள், 150 அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டடன. ஒவ்வொரு அச்சகத்திற்கும், 10 முதல், 15 லட்சம் ரூபாய் என, 22.50 கோடி ரூபாய் வரை, பாட நூல் கழகம் தர வேண்டியுள்ளது. இதைப் பற்றி கேட்டாலே, வாய் திறக்க மறுக்கின்றனர்.
இது சம்பந்தமாக, பாடநூல் கழகத்தில் இரு முறையும், கோட்டையில் இரு முறையும், எங்களிடம் அமைச்சர் பேசினார். அப்போது, "லாபமோ, நட்டமோ எதுவாக இருந்தாலும், அதை அரசு ஏற்றுக்கொள்ளும். உங்களை பாதிக்க விட்டுவிட மாட்டோம். பில் தொகை கண்டிப்பாக விரைவில் வழங்கப்படும்' என்றார்.
ஆனால், இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை.வழக்கமாக, பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்கினால், பில் தொகையில், 80 சதவீதம் 10 நாட்களிலும், மீதம் 20 சதவீத பணம் அதற்கு பிறகு விரைவில் கிடைக்கும். ஆனால், பழைய பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பல மாதங்களாகியும், பணம் தராமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.பணம் கிடைத்தால், அது எங்களின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படும். பில் தொகையை விரைவில் தருவதற்கு, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.உத்தரவை காணோம்.
பாடநூல் கழக வட்டாரங்கள் இது குறித்து கூறும்போது, "பழைய பாடப் புத்தகங்களை என்ன செய்வது என்பது குறித்தோ, அச்சிட்ட உரிமையாளர்களுக்கு பணம் வழங்குவது குறித்தோ, அரசு எவ்வித உத்தரவையும், எங்களுக்கு வழங்கவில்லை. எனவே, நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது' என தெரிவித்தனர்.
Source: Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக