பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/16/2011

தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25% இடம்- கூடுதல் பீஸ் வசூலித்தால் 'பீஸ்' பிடுங்கப்படும்: அரசு அதிரடி

சென்னை: தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடம் தர வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் பள்ளிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசிதழில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கை:

தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கான கல்விச் செலவை அரசே ஏற்கும்.

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் குழந்தைகள் என அறிவிக்கப்படுகிறது.

அதேபோல், ஆதரவற்றோர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர், திருநங்கைகள், துப்புரவுப் பணியாளரின் குழந்தைகள் ஆகியோர் மிகவும் பின்தங்கியவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.

இந்தக் குழந்தைகளை வகுப்பறையில் மற்ற மாணவர்களிடமிருந்து பிரித்து வைத்தல், வேறு இடத்தில் அல்லது, வேறு நேரத்தில் வகுப்பு நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.புத்தகங்கள், சீருடைகள், நூலகங்கள், கணினி வசதிகளைப் பயன்படுத்தும்போது இந்தக் குழந்தைகளிடம் எந்தவிதமான பாகுபாடும் காட்டக் கூடாது.

ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு செலவிடும் தொகை அல்லது பள்ளிக் கட்டண முறைப்படுத்தும் சட்டப்படி அந்தத் தனியார் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், இந்த இரண்டில் எது குறைவோ அந்தக் கட்டணத்தை அரசு செலுத்தும்.

ஒவ்வோர் ஆண்டும் இரு தவணைகளாக செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் தனியார் பள்ளிகளுக்கு இந்தக் கட்டணத்தை மாநில அரசு வழங்கும்.

அரசிடம் பணத்தைப் பெற, தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் சேர்க்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் பட்டியலை ஜூலை மாதத்தில் உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.

30 நாள்களுக்கு அதிகமாக மாணவர் விடுமுறையில் சென்றாலோ, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ அதுகுறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தனி வங்கிக் கணக்கை பள்ளிகள் தொடங்க வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கு மருத்துவமனை அல்லது அங்கன்வாடியில் வழங்கப்பட்ட ஆவணங்கள், பெற்றோர் அல்லது காப்பாளர் கூறும் குழந்தையின் வயது ஆகியவற்றை வயதுக்கான ஆவணமாக ஏற்க வேண்டும்.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான காலக்கெடு கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்பிறகு, பள்ளியில் சேரும் குழந்தைகள் படிப்பை முடிக்க அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.

விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் ஒவ்வொரு பள்ளியும் படிவம் 1-ன் படி தங்களது பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக உறுதிமொழியை வழங்க வேண்டும். அதன்பிறகு, இந்தப் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அங்கீகாரம் வழங்கப்படும்.

விதிமுறைகளை நிறைவேற்றாத பள்ளிகள், அடுத்த 3 மாதங்களுக்குள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு, தங்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்த அதிகாரிகளை அழைக்கலாம்.

புதிதாக பள்ளிகளைத் தொடங்க விரும்புபவர்கள் அங்கீகாரத்துக்காக விண்ணப்பிக்கும்போது, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறியுள்ளவாறு கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக் குழுவை ஏற்படுத்த வேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 9 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இந்தக் குழுவில் 75 சதவீதம் மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஏழை மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இந்தக் குழுவில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். மீதமுள்ள 25 சதவீத உறுப்பினர்கள் கீழ்க்கண்டவாறு நியமிக்கப்பட வேண்டும்.

உள்ளூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களால் தீர்மானிக்கப்படும் உள்ளூர் கல்வியாளர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும்.

இதில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும். குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவராக பெற்றோர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் குழுவில் பள்ளித் தலைமையாசிரியர் அல்லது துணைத் தலைமையாசிரியர் உறுப்பினராக இருப்பார்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூட வேண்டும். இங்கு விவாதிக்கப்படும் விஷயங்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக