பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/16/2011

தமிழக பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகள்

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, பள்ளிகளுக்கான பல்வேறு விதிமுறைகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது.
அதன்படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட, நலிந்த பெற்றோரின் குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்கலாம். இவர்களுக்கான கட்டணத்தை, அரசே செலுத்தும் என, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த இலவச, கட்டாயக் கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
இது குறித்து, அரசு கெஜட்டில் கூறப்பட்டிருப்பதாவது,
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கடமைகள்
முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள், ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் பள்ளிகள், 3 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். இந்த விதிமுறைக்குள் பள்ளிகளை உருவாக்க முடியாவிட்டால், அரசோ அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளோ, குழந்தைகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைத் துவங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவணங்களை பராமரிக்க உத்தரவு
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், அவரவர்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைப் பற்றிய ஆவணங்களை, முறையாகப் பராமரிக்க வேண்டும். தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள், முறையாக, தொடர்ந்து மேல்நிலைக் கல்விக்குச் செல்வதைக் கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் முகவரி, தொழில், குழந்தைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், ஆவணங்களில் இடம்பெற வேண்டும்.
லாப நோக்கு கூடாது
பள்ளிகளை, தனியொரு நபராகவோ, கூட்டாகவோ சேர்ந்து, லாப நோக்கத்துடன் நடத்தக் கூடாது. பள்ளிக் கட்டடங்களை, கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதிகாரிகள், எந்நேரத்திலும் பள்ளிகளைச் சோதனையிடலாம். அரசின் விதிமுறைகள்படி, பள்ளிகள் இயங்குகின்றனவா என்பதைக் கண்காணித்தும், அதன்படி நடக்காதபோது, பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கலாம்.
கட்டண விவகாரம்
கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் என, பள்ளி நிர்வாகங்கள் உறுதி அளிக்க வேண்டும். பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள உள் கட்டமைப்பு வசதிகளைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகக் குழு
அனைத்துப் பள்ளிகளிலும், பள்ளி நிர்வாகக் குழுவை ஏற்படுத்த வேண்டும். குழுவில், 75 சதவீதம் பேர், மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களாக இருக்க வேண்டும். 25 சதவீத உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்களாக இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
துப்புரவு தொழிலாளி குழந்தைக்கு சலுகை
தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணங்களை, இரு தவணைகளாக, அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்குள் உள்ள நலிந்த பெற்றோரின் குழந்தைகள், இலவச, கட்டாயக் கல்வி பெறலாம். அதேபோல், அனாதைகள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், திருநங்கை குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரும், இலவசக் கட்டாயக் கல்வியைப் பெறும் உரிமைகளைப் பெறுகின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்து உத்தரவு
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு, ஏராளமான நிபந்தனைகளை, தமிழக அரசு விதித்துள்ளது.
இது குறித்து, சட்ட விதிமுறையில் அரசு கூறியிருப்பதாவது,
* இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009) மற்றும் தமிழக அரசு கொண்டுவந்துள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2011) ஆகியவற்றில் தெரிவித்துள்ள விதிமுறைகளை, பள்ளிகள் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
* தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை (பிரீ-கேஜி மற்றும் முதல் வகுப்பு சேர்க்கையில்), அருகிலுள்ள, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.
* தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கான கட்டணங்களை, அரசிடம் இருந்து திரும்பப் பெற, தனி வங்கிக் கணக்கு துவக்க வேண்டும்.
* குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ, குழந்தைகளின் பாதுகாவலர்களிடமோ எவ்வித நன்கொடை கட்டணத்தையும் பெறக் கூடாது.
* ஜாதி, மதம், இனங்களை காரணம் காட்டி, குழந்தைகளைச் சேர்க்க மறுக்கக் கூடாது.
* மாணவர்கள், தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை (எட்டாம் வகுப்பு), எக்காரணம் கொண்டும், அவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது.
* மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனைகளை விதிக்கக் கூடாது.
* தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கக் கூடாது.
* தொடக்கக் கல்வியை முடிக்கும் அனைத்து மாணவர்களும், சான்றிதழைப் பெறும் உரிமையைப் பெறுகின்றனர்.
* அரசு நிர்ணயித்த பாடத் திட்டங்களை மட்டுமே நடத்த வேண்டும். அங்கீகாரம் பெறாத வகுப்புகளை, பள்ளி வளாகத்திற்குள் நடத்தக் கூடாது. பள்ளி கட்டடங்கள், மைதானம் ஆகியவை, கல்வி மற்றும் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
* பள்ளியின் வரவு-செலவு தணிக்கை குறித்த அறிக்கைகளை, ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்ப வேண்டும். சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைபிடிக்காவிட்டால், பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் நடந்தால், 1 லட்ச ரூபாய் அபராதமும், அதன் பின் ஒவ்வொரு நாளும், 10 ஆயிரம் ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படும்.
ஆசிரியர்களுக்கு அவகாசம் 
ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெறாதவர்கள், விதிமுறைகள் வெளியிட்ட தேதியில் இருந்து, 5 ஆண்டுகளுக்குள், உரிய தகுதியைப் பெற வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தனி படிவம்
தனியார் பள்ளிகள், அங்கீகாரத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான தனி படிவத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏழு பக்கங்கள் கொண்ட படிவத்தில், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் முதல், ஆசிரியர்கள், பணியாளர்கள், அவர்களது சம்பளம் உட்பட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக