34
மாதிரி பள்ளிகளில் காந்தி பிறந்தநாளில் விற்பனையாளர் இல்லாத கடைகள்
தொடங்கப்படுகிறது. இதில் மாணவர்கள் பணம் போட்டுவிட்டு, தேவையான பொருட்களை
எடுத்துக் கொள்ளலாம்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாநில
இயக்குனர் ஆ.சங்கர், இணை இயக்குனர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுயகட்டுப்பாடு
சாதி, மத பேதமற்ற
ஆரோக்கியமான உயர்ந்த சமுதாயத்தை உருவாக்க கல்வியை சுயசிந்தனை,
சுயகட்டுப்பாடு, தன்னம்பிக்கை, பொதுநலன், விடாமுயற்சி போன்ற குணங்களை கொண்ட
குடிமகனது கடமையாகிறது. இத்தகைய குடிமக்களை உருவாக்குவதில்
பள்ளிக்கூடமானது முதன்மையாக திகழ்கிறது.
பள்ளிக்கூட சூழல் மட்டுமே இவை
அனைத்தையும் ஒரு சேர வழங்குகிறது. குறிப்பாக அனைவருக்கும் இடைநிலை
கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரிப்பள்ளிகள் மாணவர்களின் கற்றல்
திறன், விளையாட்டு, ஆளுமைத்திறன் போன்ற திறன்களை வளர்க்க பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேர்மை கடைகள்
இதன் ஒரு
அங்கமாக மாணவர்களிடம் நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும்
பொருட்டு பள்ளிகளில் நேர்மை அங்காடி என்ற ஒன்றை காந்தியின் பிறந்த நாளான
அக்டோபர் 2-ந்தேதி தொடங்குவது பொருத்தமாக அமையும்.
நேர்மை அங்காடி
என்பதுயாருடைய மேற்பார்வை (விற்பனையாளர்) இல்லாமல் இயங்கக்கூடிய ஒன்றாகும்.
இந்த கடைகளில் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், அதனுடைய விலையை
குறிப்பிட்டு வைக்கப்பட்டிருக்கும். தேவையான பொருட்களை மாணவர்கள் அதற்கான
பணத்தை அவர்களே அங்குள்ள பணப்பெட்டியில் போட்டுவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.
பேப்பர், பேனா
இந்த கடைகளை தொடங்க அனைத்து மாதிரிப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் உடனடியாக
ஏற்பாடு செய்யவேண்டும். கடையின் ஆரம்ப முதலாக ரூ.500ஐ பள்ளி மேலாண்மை
நிதியில் இருந்து பயன்படுத்தவேண்டும்.
பாதுகாப்பான ஒரு அறையை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் கடையை ஆரம்பித்தல் வேண்டும்.
மாணவர்களுக்குள்ளேயே நபர்களை தேர்ந்தெடுத்து கடையை வழிநடத்த வேண்டும்.
பேப்பர், பேனா, பென்சில், ரப்பர் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை
செய்யவேண்டும். உணவுப்பொருள் விற்கக்கூடாது.
லாப நோக்கின்றி
பொருட்களின் விலை பட்டியலை கடையின் முன் தெளிவாக வைக்க வேண்டும். விலையை
எக்காரணம் கொண்டும் லாபநோக்கோடு நிர்ணயிக்கக்கூடாது. இதை தலைமை ஆசிரியர்கள்
கண்காணிக்க வேண்டும். தினசரி விற்பனை விவரத்தை இறை வழிபாட்டுதலத்தில்
படித்து காண்பிக்க வேண்டும்.
இந்த கடைகளை அனைத்து மாதிரிப்பள்ளிகளிலும்
தொடங்குவதை மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்யவேண்டும். இதுபோல
பிற பள்ளிகளிலும் தொடங்க முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக