ஆசிரியர்
தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, தெரிவித்துள்ளது.வழக்கறிஞர்
பழனிமுத்து என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில்,
கூறியுள்ளதாவது:"ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு
அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இது தொடர்பான தேசிய ஆசிரியர் கல்வி
கவுன்சில் அறிக்கையில், ஏற்கனவே மாநில அரசுகள் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு
முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் ஆந்திரா,
ஒடிசாவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் இந்த முறையை
பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று தலைமை
நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் நீதிபதி சத்திய நாராயணன்
முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆசிரியர்
தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல்
செய்தார். அதில், "ஆசிரியர் தகுதி தேர்வில் ஜாதி ரீதியான பாகுபாடு
அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு
எடுத்துள்ளது. இந்த தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக
தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால்தான் வேலை வாய்ப்பு என்ற
கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது. எனவே இடஒதுக்கீடு
அடிப்படையில் தகுதி தேர்வில் மதிப்பெண் வழங்க தேவையில்லை" என்று
கூறப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோர் 22ஆம் தேதிக்கு
நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக