ஆசிரியர்கள் கண்டித்ததால் மனம் உடைந்த பள்ளி மாணவிகள் 7 பேர் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
கண்டிப்பு
மதுரை–அழகர்கோவில் சாலையில் உள்ளது, பொய்கைகரைப்பட்டி. இங்கு, மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த வினிசிகா, செல்வி, ஜெயந்தி, ஜெகதீஸ்வரி, ஒய்யம்மாள், சிவனேஸ்வரி, ஆழிப்பொண்ணு ஆகியோர் 7–ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் 7 பேரும் தோழிகள்.
இவர்கள் சரியாக படிப்பது இல்லை என ஆசிரியர்கள் அடிக்கடி கண்டித்து வந்தனர். நேற்றும் இதேபோல மாணவிகளை அவர்கள் கண்டித்தனர்.
வாழைப்பழத்தில் விஷம்
இதனால் 7 மாணவிகளும் மனம் உடைந்தனர். அப்போது பள்ளி இடைவேளை விடப்பட்டு இருந்தது.
பள்ளியின் பின்புறம் சென்ற அவர்கள், தாங்கள் முன்னதாகவே வாங்கி வைத்திருந்த விஷமருந்தை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.
இடைவேளை முடிந்த பின்னரும் மாணவிகள் வகுப்பறைக்கு வராததால் சந்தேகமடைந்த ஆசிரியர் மாணவிகளை தேடினார். அப்போது அவர்கள் பள்ளியின் பின்புறம் மயங்கிக்கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கு விடுமுறை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பகல் 12.30 மணிக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாணவிகள் அனுமதிக்கப்பட்டு உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் உறவினர்கள், கிராம மக்கள் திரண்டதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக