நாமக்கல்: தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர் விடுப்பு குறைந்துள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் துவக்கப்பள்ளிகள் 34 ஆயிரத்து 871ம், 9,969 நடுநிலை பள்ளிகளும் உள்ளன. அதில் 53 லட்சத்து 32 ஆயிரத்து 613 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களுக்கு, இரண்டு லட்சத்து 12 ஆயிரத்து 105 ஆசிரியர்கள் பாடம் கற்றுத்தருகின்றனர்.
மாணவர்களுக்கு தரமான கல்வி நோக்கிய தமிழக அரசின் இலக்கில், முன் முயற்சியாக முப்பருவ கல்வி முறையும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும், கடந்த 2012-13ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இம்முறையில், மாணவர்களை மதிப்பீடு செய்யும் செயல்பாடுகள் விளக்கப்படுகிறது. மாணவர்களிடம் இருக்கும் முழுமையான திறமைகளை தர அளவீடு செய்தல், அவர்களுக்குள் புதைந்துள்ள ஒரு திறன் மட்டும் அல்லது பன்முக திறன்களையும் வெளிக்கொண்டு வர இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு முழுமையாக மதிப்பீடு செய்ய ஆசிரியர்களுக்கு இது உதவுகிறது. இக்கல்வி முறையால் குழந்தைகளின் மன அழுத்தம் குறைவதுடன், பிரச்னைகளை தீர்க்கவும், திறன்களை வளர்ச்சி அடையவும் பேருதவியாக உள்ளது.
இப்பருவம் முழுவதும் மதிப்பீடு செய்யும் வளர் அறி மதிப்பீடு, ஒவ்வொரு பருவ இறுதியில் மதிப்பீடு செய்யும் தொகுத்தறி மதிப்பீடும் உள்ளது. இவ்வாறு அளவீடு செய்வதன் மூலம் முழுமையான ஆளுமை வளர்ச்சி அறியலாம். வேகத்துக்கு ஏற்ப மதிப்பீடு நெகிழ்வு தன்மை விளக்கப்படுகிறது.
இந்த முறையில் மதிப்பெண்களுக்கு பதில் தரக்குறியீடு பயன்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் எடை, மனச்சுமை கணிசமாக குறைகிறது. மன அழுத்தம் அற்ற சூழ்நிலையில் கற்பித்தல் பணி நடக்கிறது. தேர்வு குறித்த பயம் தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக புத்தகச்சுமை குறைந்துள்ளது.
குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக அமைகிறது. மதிப்பெண் சார்ந்த ஆரோக்கியமற்ற போட்டியை குறைக்கிறது. மாணவர்களும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். வருகையின்மை குறைந்துள்ளது.
இளம் தலைமுறையினரை ஆளுமைமிக்கவர்களாவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், வருங்காலத்தை வடிவமைப்பவர்களாகவும், இம்முறையில் உருவாக்க முடியும் என்பது, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுக் கல்வியின் சிறப்பு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுக் கல்வி முறையில், ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறன்களும் கண்டறியப்படுகிறது. அதன் மூலம், அம்மாணவர்கள் மேலும் உயர அவற்றை ஊக்குவிக்கப்படுகிறது.
புத்தகச்சுமை குறைவதுடன், தேர்வு பயம் அறவே போக்கப்படுகிறது. செயல்வழிக் கற்றல் முறையை நீக்கிவிட்டு புத்தக வழியில் உள்ள முழுமையான தொடர்ச்சியான மதிப்பீடு முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டால் எதிர்பார்க்கும் கல்வி தரம் மேம்படும். மாணவர்களும், வாழ்க்கையில் உயர வாய்ப்பும் உள்ளது. தற்போது அரசு பள்ளியில், மாணவர் வருகை அதிகரித்துள்ளது." இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக