தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தை மாற்றியமைப்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்காத நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை பத்தாம் வகுப்பு தேர்வு, காலை, 10 மணிக்கு துவங்கி வந்தது. இந்த நேரத்தை மாற்றும் படி யாரும் எவ்வித கோரிக்கையும் வைக்காத நிலையில் அரசு தேர்வுத்துறை திடீரென 45 நிமிடம் முன்னதாக தேர்வு தொடங்கும் படி மாற்றியமைத்தது. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களும், பெற்றோரும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து கோரிக்கை விடுத்த ஆசிரியர் சங்கங்களிடம், தேர்வுத்துறை இயக்குனரகத்திலும், "தேர்வு நேரத்தை மாற்ற, முதல்வரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி, 45 நிமிடம் முன்கூட்டியே துவக்க கல்வித்துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால், கிராமப்புற மாணவர்களும், மெல்ல கற்கும் மாணவர்களும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும், தேர்ச்சி விகிதம் சரியவும் வாய்ப்புள்ளது என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சேலம் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தன் கூறியதாவது:
அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைக்கப்படுவதில்லை என்பதால், பல பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறி பயணம் செய்ய வேண்டியுள்ளது. முன்கூட்டியே துவங்குவதால், காலை 6 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி, மையத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். இதனால் காலை சிற்றுண்டி சாப்பிடுவது, படித்த பாடங்களை புரட்டி பார்ப்பது உள்ளிட்ட எதற்குமே வழியிருக்காது.
என்ன காரணத்துக்காக நேரம் மாற்றியமைக்கப்பட்டது என்பது யாருக்குமே புரியாத புதிராக உள்ளது. மூன்று மணி நேரத்துக்கும் மேல் நடக்கும் ப்ளஸ் 2 தேர்வு, காலை 10 மணிக்கு துவங்குகிறது. இரண்டரை மணி நேரம் நடக்கும், பத்தாம் வகுப்பு தேர்வை, 45 நிமிடம் முன்கூட்டி நடத்துவதால், யாருக்கு லாபம் எனவும் புரியவில்லை. வலுவான காரணம் இல்லாததால், கடைசி நேரத்தில் மீண்டும் பழைய படி தேர்வு நேரம் மாற்றியமைக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், இந்த விசயத்தில் அரசு மெத்தனம் காட்டி வருவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
அதுமட்டுமின்றி காலையில் புத்தகத்தை ரிவிஷன் செய்து பார்க்கக்கூட அவகாசம் இல்லாத நிலையில், மாணவர்கள் பதட்டமடைய வாய்ப்புள்ளது. இதனால், தேர்ச்சி விகிதமும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மீண்டும் பழைய நேரத்திலேயே துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக