மதுரை: தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 83 ஆயிரத்து 103 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள் 2,449 பேர். ஆசிரியர்கள் மீது 30 புகார்கள் வந்துள்ளன என டி.ஜி.பி., மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார்.
தஞ்சாவூர் மனத்திடல் ஜான் கென்னடி தாக்கல் செய்த மனு: நடுக்காவிரி செயின்ட் தாமஸ் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்தேன். அங்கு கல்வியராயன்பேட்டை தெய்வராஜ் மகன் படித்தார். அவர் 2012 மார்ச் 7 ல் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அம்மாணவருக்கு தேர்வில் மதிப்பெண் குறைந்தது.
அவரை கண்டித்ததால் தற்கொலை செய்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் என் மீது நடுக்காவிரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாணவர்களை துன்புறுத்தும் நோக்கில், ஆசிரியர்கள் நடக்க மாட்டார்கள். திருவையாறு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து, விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை (எப்.ஐ.ஆர்.,) ரத்து செய்ய உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி, "ஐந்தாண்டுகளில் தற்கொலை செய்த மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் மீது பதிவான வழக்கு விபரங்களை டி.ஜி.பி., தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.
நீதிபதி என்.கிருபாகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் கந்தசாமி, மனுதாரர் தரப்பு வக்கீல் அருண்பிரசாத் ஆஜராகினர்.
டி.ஜி.பி., தாக்கல் செய்த அறிக்கை: மாநிலத்தில் 2009 முதல் 2014 ஆகஸ்ட் வரை 83 ஆயிரத்து 103 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள் 2449 பேர். ஆசிரியர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் மீது 30 புகார் வந்துள்ளன. சென்னையில் 13 ஆயிரத்து 506 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள் 363 பேர். கோவையில் தற்கொலை செய்தவர்கள் 6383. இதில் மாணவர்கள் 153 பேர்.
திருநெல்வேலியில் தற்கொலை 4946 பேரில், மாணவர்கள் 283 பேர். மதுரையில் 4441 பேர் தற்கொலையில், மாணவர்கள் 217 பேர். திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரில் 8681 பேர் தற்கொலை செய்ததில், மாணவர்கள் 226 பேர், என குறிப்பிட்டார். விசாரணையை நீதிபதி இன்றைக்கு (செப்., 24) தள்ளிவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக