கோவை: கற்றல் முறையை நவீனப்படுத்தி, அனைத்து அரசு பள்ளிகளின் வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும் விதமாக, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி பயிற்சியின் வாயிலாக, ஆசிரியர் விடுப்பு எடுக்கும்போது கூட, வகுப்புகள் நடப்பதால், மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை, தொழில்நுட்ப முயற்சிகள் வாயிலாக மேம்படுத்த, பள்ளிக் கல்வித்துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலை நாடுகளின் வகுப்புகளைபோல், அரசு பள்ளி வகுப்புகளிலும், மாற்றத்தை கொண்டுவர, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு ஐந்து பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, வகுப்பறை நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, ராஜவீதி, கணுவாய், கவுண்டம்பாளையம், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, ஐந்து இடங்களில், செயல்பட்டு வருகிறது. இணையதள வசதி மூலம், புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, குறிப்பிட்ட ஐந்து பள்ளிகளில், முக்கிய பகுதிகளை செய்முறை மற்றும் விளக்கங்களுடன் நடத்த வேண்டியிருந்தாலும், ஆசிரியர்கள் விடுப்பானாலும் வழக்கம்போல் வகுப்புகள் நடக்கும்.
இதற்கு, நோடல் மையமாக, ராஜவீதி துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதை மற்ற வகுப்புகளுக்கும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை, ராஜவீதி துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "இணையவழி கற்றல் முறையினாலும், புதிய ஆசிரியர்கள், வகுப்பறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பாடங்களை கவனிக்கின்றனர். நோடல் மைய பள்ளியில் இருந்து, ஆசிரியர்கள் வாயிலாக நடத்தப்படும் பாடத்தை, மற்ற பள்ளி மாணவர்கள் கவனிக்க முடிவதோடு, புரியாத பகுதிகள் குறித்து கேள்விகள் எழுப்பலாம்.
இதற்கு, மற்ற நான்கு பள்ளி மாணவர்களும், வெப் கேமரா முன்னிலையில், V எழுத்து வடிவத்தில் அமர்ந்திருக்க வேண்டும். ஒரே சமயத்தில், குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் வரை, விவாதத்தில் பங்கேற்கலாம்; மற்ற மாணவர்கள் அதை கவனிக்க முடியும். இப்புது முயற்சியால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என இரு தரப்பினருக்கும், புதுவிதமான கற்றல் அனுபவம் கிடைக்கிறது," என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக