ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
By சிவகங்கை
First Published : 09 January 2016 04:28 AM IST
மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபக்கம், மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார் படுத்தக் கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறுபக்கம், மாணவர்களின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மாணவர் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக