தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.பி.சிவராமன் அவர்கள் மீது சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
கடந்த சில காலங்களாகவே ஆசிரியர் சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. வகுப்பறைக்குள்ளே ஆசிரியர்கள் கொலை செய்யபடுவதிலிருந்து பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கல்வி வணிக பொருளாக்கப்பட்டு கல்வியின் மகத்துவத்தை சின்னபின்னமாக்கிய அரசுகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இலாப வேட்கை கொண்ட கார்ப்பரேட்டுகள் கல்வி நிறுவனங்களை தங்களின் மூலதனம் பெருகுவதை இலக்காக கொண்டதன் விளைவு, இந்த நாட்டின் எதிர்காலமாக திகழ வேண்டிய மாணவர் சமுதாயம் மாயை உலகின் பின்னால் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆசிரியர் சமுதாயம் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் பேராசியர் சிவராமன் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் சில சமூக விரோதிகளால் கண் மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்ட ரீதியான தண்டனை பெற்றுத் தர வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஆசிரியர் சமுதாயம் அச்ச உணர்வின்றி பாதுகாப்பாக பணியாற்ற உரிய சட்ட பாதுகாப்பினை வழங்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக