சென்னை, : ‘சமச்சீர் கல்வி முறையில் பாடப்புத்தகங்கள் தரமற்றது’ என்று உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடினார்.உயர் நீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடிய விவரம்:
மத்திய அரசு கொண்டு வந்த கல்விச் சட்டத்தின் கீழ் சமச்சீர் கல்வி இல்லை. தேசிய கல்வி கவுன்சில் வகுத்த விதிமுறைபடியும் இல்லை. கிராமப்புற, நகர்புற மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சமச்சீர் கல்வி இல்லை. கடந்த அரசு அச்சிட்ட சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டது. இது முழுவதும் தரமற்றது.
பாடங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் உள்ளது. அனைத்து பாட புத்தங்களையும் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் பல குறைபாடுகள் உள்ளது.
மாணவர்கள் நலனுக்கு இந்த சமச்சீர் கல்வி உகந்ததாக இல்லை. மாணவர்கள் திறனை வளர்க்கும் வகையில் சமச்சீர் கல்வி இல்லை. தேசிய அளவில் மற்றும் உலக அளவில் மாணவர்கள் போட்டியிடக்கூடிய வகையில் இந்த சமச்சீர் கல்வி இல்லை. சமச்சீர் கல்வி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அதிக சுமையாக உள்ளது. சமச்சீர் பாடங்களில் கொடுக்கப்பட்ட விடைகள் தவறாக உள்ளது. சில பாடங்களை ஆசிரியர் படித்து புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. சமச்சீர் கல்வி தரமற்றது என்று மெட்ரிக் பள்ளிகள் தரப்பில்
ஆஜரானவர்கள் கருத்து கூறியுள்ளனர்.கடந்த ஆண்டு அமல்படுத்திய 1 மற்றும் 6ம் வகுப்புக்கான சமச்சீர் கல்வி தரமற்றது என்றும், பள்ளிகள் தரப்பில் கமிட்டியில் நிரூபித்துள்ளனர். இதை கமிட்டி பதிவு செய்துள்ளது. சமச்சீர் கல்வியில் பல தவறுகள் உள்ளதால், இதை இந்த கல்வி ஆண்டு அமல்படுத்த முடியாது என்று கமிட்டி அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளது. இதை நீதிமன்றம் ஏற்று வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக