ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், கிராம மாணவர்களுக்கு அரசு பள்ளியிலும் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெருகி வரும் ஆங்கில மோகத்தால், கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை நகர்புற ஆங்கில பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால், பெரும்பாலான கிராமங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மாணவர்களை தக்க வைக்கும் வகையில், இலவச பஸ், சீருடை, நோட்புக் போன்ற திட்டங்களை அறிமுகபடுத்தி வருகின்றன.
இதைதொடர்ந்து, ஒரு சில அரசுபள்ளிகளிலும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியில் தேர்வுபெற்ற ஆசிரியரை கொண்டு ஆங்கிலம் கற்பித்து வருகின்றனர். இதற்காக, பள்ளி ஆசிரியர்களே தங்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை இதற்காக செலவிடுகின்றனர். இதன்காரணமாக கிராம மாணவர்களும் ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு கிடைத்ததால், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் ஜெசிந்தா கூறியதாவது: கடந்த மாதத்தில் இருந்து மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கீலிஷ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தினமும் ஒன்றரை மணி நேரம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் கற்பிக்க ஆரம்பித்த 15 நாட்களிலே ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்கின்றனர். குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மற்ற வகுப்புகளுக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத்தர ஆலோசித்து வருகிறோம், என்றார். ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்று தருவது இது தான் முதல் முறை. ஆங்கிலம் கற்பதற்கு பெற்றோர் படித்திருக்க வேண்டுமென்பது இல்லை. தற்போது கிராம மாணவர்களும் ஆங்கிலத்தை எளிதில் கற்று, தங்களுக்குள் பேச துவங்கி விட்டனர். இவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவது எனக்கு மன நிறைவை தருகிறது, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக