பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/29/2014

விருப்ப மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு மறைக்கப்பட்ட பணியிடங்கள்

மதுரை: ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி, கள்ளர் பள்ளிகளில் பணிபுரிய, விருப்ப மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு, பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 6.8.2014ல் வெளியிட்ட அறிவிப்பில், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்புத் துறை துவக்க பள்ளிகளில், 64 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை நிரப்ப, 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்த தேர்ச்சியாளர்கள் மட்டும் விருப்ப மனுக்கள் அளிக்கலாம், என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, மூன்று மாவட்டங்களிலும் 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆக.,11 மற்றும் 12ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு விருப்ப மனுக்களை டி.ஆர்.பி., பெற்றது. சமீபத்தில் நடந்த பொதுமாறுதல் கவுன்சிலிங்கில், விருப்ப மனுக்கள் அளித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், தொலைவில் உள்ள மாவட்டங்களில் அரசு தொடக்க பள்ளிகளில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை பெற்ற 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதுவரை அந்த பணியிடங்களில் சேரவில்லை.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், "டி.ஆர்.பி., அறிவிப்பின்படி விருப்ப மனுக்கள் அளித்தோம். கவுன்சிலிங்கில் தொலைதுார மாவட்டங்களில் பணி ஒதுக்கி அலைக்கழிக்கின்றனர். இது டிரான்ஸ்பர் பெயரில் வேறு எதையோ எதிர்பார்ப்பதாக தெரிகிறது. கல்வி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

9/26/2014

அனைத்து வகுப்பறையிலும் சுவர் வரைபடம் கட்டாயம்

கோவை: ’வரலாறு, புவியியல் பாடங்களை, பள்ளிக் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு வகுப்பறையிலும், சுவர் வரைபடங்கள் (வால் மேப்) கட்டாயம் தொங்கவிடப்பட வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிப் பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை, சமூக அறிவியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேல்நிலை கல்வியிலும், பிளஸ் -1, பிளஸ்- 2 வகுப்பில், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு. இதில், மன்னர்களின் ஆட்சி எல்லைப் பகுதி, முக்கிய அமைவிடங்கள், அரசியல், நிலப்பரப்பு, கடல்கள், ஆறுகள், தட்பவெப்ப நிலை, விவசாயம், பயிர்கள் போன்றவை குறித்து, எளிதாக அறிந்துகொள்ள வரைபடங்கள் பெரிதும் உதவும்.
அதுமட்டுமல்லாமல், வரைபடங்கள் தொடர்பான வினாக்களும், தேர்வில் கேட்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரைபடம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, நூறு மதிப்பெண்கள் எடுக்க முடியும். தேர்வுக்கு மட்டுமின்றி, பொது அறிவை வளர்ப்பதிலும், வரைபடங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதற்காக, ’இந்தியா’, ’தமிழ்நாடு’, ’மாவட்டம்’ என, மூன்று வகையான வரைபடங்கள், வகுப்பறை சுவர்களில் தொங்கவிட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், “பள்ளி வகுப்பறைகளில், தேர்வு நாட்களை தவிர, எல்லா நாட்களிலும், புவியியல் சுவர் வரைப்படங்கள், கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ள, சிறு குழுக்களாக பிரித்து, வாரந்தோறும் போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது, வரைபட நிகழ்வுகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என்றார்.

எஸ்.எஸ்.ஏ., ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு தணிக்கை தடை?

மதுரை: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது. இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் ’ஒரு நபர் கமிஷன்’ அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10 முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 வழங்க அரசு உத்தரவிட்டது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 400 பேர் வரை, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக ’அயற்பணியாக’ மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர். ஆனால், இவர்கள் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை ஏ.ஜி., ஆடிட் அலுவலகத்தில் இருந்து ’தணிக்கை தடை’ குறிப்பாணை அனுப்பப்பட்டன.
அதில், ’அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து, எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் எனவும், ’சிறப்பு சம்பளம்’ அரசு உத்தரவு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான் பொருந்தும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனர் சங்க மாநில தணிக்கையாளர் முத்துக்குமரன் கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி. சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப் பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு ஆசிரியர்கள் செல்ல மாட்டார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட தணிக்கை தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.

12,347 ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் நியமன ஆணை: பணியில் உடனடியாக சேர தமிழக அரசு உத்தரவு

சென்னை: வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கு நேற்று ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு 10,531 பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி துறைக்கு 167 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12,347 பேர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு, கடந்த 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்தது. கலந்தாய்வின் கடைசி நாளன்று பணிநியமன ஆணை வழங்கப்பட இருந்தது. இந்நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆசிரியர் பணிநியமன ஆணை வழங்குவதற்கு தடை விதித்தது. இதன் காரணமாக, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்ய பட்டதாரி ஆசிரியர் களுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி ஒதுக்கீட்டு ஆணை மட்டும் வழங்கப்பட்டது. யாருக்கும் நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதற்கிடையே, பணிநியமன ஆணை வழங்குவதற்கு விதித்திருந்த தடையை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமையன்று நீக்கியது. இதைத்தொடர்ந்து, 12,347 ஆசிரியர்களுக்கும் ஏற்கெனவே கலந்தாய்வு நடந்த மையங்களில் நேற்று பிற்பகல் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித் துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் இருந்தும், தொடக்கக்கல்வித் துறைக்கு பணிவாய்ப்பு பெற்றவர்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளிடமும் நியமன ஆணையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 80 இடங்கள் காலியாக வைக்க உத்தரவு ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாதது உட்பட பல்வேறு நிவாரணங்கள் கோரி தாக்கலான 73 மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் ஆஜராகி, "நீதிமன்றம் விதித்துள்ள தடையால் மாநிலத்தில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமன நடைமுறைகள் தடைபட்டுள்ளன. மனுதாரர்கள் 73 பேருக்காக 14 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே தடையை நீக்க வேண்டும். பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்" என்றார். இதையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை பட்டதாரி, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க வேண்டும். எஞ்சிய பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.&

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

பணி நியமனம் பெற்றவர்கள் உடனடியாக பணியேற்க உத்தரவு


9/25/2014

இடைநிலை,பட்டதாரி ஆசிரியராக தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை: அரசு அறிவிப்பு


தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை இன்று பிற்பகல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலந்தாய்வுக்கு வந்தவர்கள் தாங்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு மையத்துக்கு சென்று தங்களுக்குரிய பணி நியமன ஆணையை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது. பணி நியமன ஆணையை பெற்றவுடன் தேர்வு பெற்றவர்கள் உடனடியாக பணியில் சேருமாறும் பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இன்று பிற்பகல் உயர்நீதிமன்ற மதுரை கிளை 80 இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவிகளை தவிர இதர பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யலாம் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து அரசு இந்த அறிவிபபை வெளியிட்டுள்ளது.

100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்- தமிழக அரசு உத்தரவு

நெல்லை: தமிழகத்தில் உள்ள 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக 1000 ஆசிரியர் பணியிடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2014-15ம் கல்வி ஆண்டில் 100 அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். இதை தொடர்ந்து தரம் உயர்த்தப்படும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் பட்டியலை தமிழக பள்ளி கல்வி துறை தயாரித்து வந்தது. தற்போது அப்பட்டியலில் உள்ள 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். இந்த பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் உள்பட 9 பணியிடங்களும், 100 பள்ளிகளுக்கு தலா 1 தலைமை ஆசிரியர் பணியிடமும் அனுமதிக்கப்படுகிறது. இந்த 100 பள்ளிகளுக்கும் புதிதாக 1000 பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய அரசாணை ரத்து

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
“பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால் தகுதித் தேர்வில் 5 சதவீத தளர்வு வழங்கியதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்தபின்பு மதிப்பெண் தளர்வு வழங்கியது சரியல்ல. தகுதித்தேர்வை போட்டித்தேர்வு போன்று தமிழக அரசு கருதியுள்ளதை ஏற்க இயலாது. சமூக நீதி என்பதை இதில் எதிர்பார்க்கவேண்டியதில்லை” என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மதிப்பெண் தளர்வு அரசாணைப்படி மதிப்பெண் சலுகை பெற்று பணி நியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

Annamalai University DDE Result - May 2014

TET பணிநியமன ஆணை உடனடியாக பெற்றுக்கொள்ள உத்தரவு.

ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்ட பள்ளியை தேர்ந்தெடுத்தவர்கள் பணி நியமன ஆணையை இன்று பிற்பகல் முதல் சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் (கலந்தாய்வு மையங்களில்) பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமன உத்தரவு பற்றி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு எவ்வித மின்னஞ்சலும் இதுவரை வராததால் தேர்வர்கள் குழப்பம்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்தந்நத கலந்தாய்வு மையங்களில் உத்தரவு பெற்றுக்கொள்ளலாம் என தகவல்.

அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.

முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: இந்த புதிய முறையால், ஊழியர்கள் பல்வேறு விவரங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். காலியிடங்கள், பதவி உயர்வு, ஓய்வு பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாநில அளவில் அறிந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

5 ஆண்டுகளில் தமிழகத்தில் தற்கொலை செய்த மாணவர்கள் 2,449 பேர்!

மதுரை: தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 83 ஆயிரத்து 103 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள் 2,449 பேர். ஆசிரியர்கள் மீது 30 புகார்கள் வந்துள்ளன என டி.ஜி.பி., மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார்.
தஞ்சாவூர் மனத்திடல் ஜான் கென்னடி தாக்கல் செய்த மனு: நடுக்காவிரி செயின்ட் தாமஸ் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்தேன். அங்கு கல்வியராயன்பேட்டை தெய்வராஜ் மகன் படித்தார். அவர் 2012 மார்ச் 7 ல் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அம்மாணவருக்கு தேர்வில் மதிப்பெண் குறைந்தது.
அவரை கண்டித்ததால் தற்கொலை செய்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் என் மீது நடுக்காவிரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாணவர்களை துன்புறுத்தும் நோக்கில், ஆசிரியர்கள் நடக்க மாட்டார்கள். திருவையாறு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து, விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை (எப்.ஐ.ஆர்.,) ரத்து செய்ய உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி, "ஐந்தாண்டுகளில் தற்கொலை செய்த மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் மீது பதிவான வழக்கு விபரங்களை டி.ஜி.பி., தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.
நீதிபதி என்.கிருபாகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் கந்தசாமி, மனுதாரர் தரப்பு வக்கீல் அருண்பிரசாத் ஆஜராகினர்.
டி.ஜி.பி., தாக்கல் செய்த அறிக்கை: மாநிலத்தில் 2009 முதல் 2014 ஆகஸ்ட் வரை 83 ஆயிரத்து 103 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள் 2449 பேர். ஆசிரியர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் மீது 30 புகார் வந்துள்ளன. சென்னையில் 13 ஆயிரத்து 506 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள் 363 பேர். கோவையில் தற்கொலை செய்தவர்கள் 6383. இதில் மாணவர்கள் 153 பேர்.
திருநெல்வேலியில் தற்கொலை 4946 பேரில், மாணவர்கள் 283 பேர். மதுரையில் 4441 பேர் தற்கொலையில், மாணவர்கள் 217 பேர். திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரில் 8681 பேர் தற்கொலை செய்ததில், மாணவர்கள் 226 பேர், என குறிப்பிட்டார். விசாரணையை நீதிபதி இன்றைக்கு (செப்., 24) தள்ளிவைத்தார்.

அரசு பள்ளிகளில் கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம் - மாணவர்கள் அதிக ஆர்வம்

கோவை: கற்றல் முறையை நவீனப்படுத்தி, அனைத்து அரசு பள்ளிகளின் வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும் விதமாக, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி பயிற்சியின் வாயிலாக, ஆசிரியர் விடுப்பு எடுக்கும்போது கூட, வகுப்புகள் நடப்பதால், மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை, தொழில்நுட்ப முயற்சிகள் வாயிலாக மேம்படுத்த, பள்ளிக் கல்வித்துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலை நாடுகளின் வகுப்புகளைபோல், அரசு பள்ளி வகுப்புகளிலும், மாற்றத்தை கொண்டுவர, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு ஐந்து பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, வகுப்பறை நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, ராஜவீதி, கணுவாய், கவுண்டம்பாளையம், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, ஐந்து இடங்களில், செயல்பட்டு வருகிறது. இணையதள வசதி மூலம், புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, குறிப்பிட்ட ஐந்து பள்ளிகளில், முக்கிய பகுதிகளை செய்முறை மற்றும் விளக்கங்களுடன் நடத்த வேண்டியிருந்தாலும், ஆசிரியர்கள் விடுப்பானாலும் வழக்கம்போல் வகுப்புகள் நடக்கும்.
இதற்கு, நோடல் மையமாக, ராஜவீதி துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதை மற்ற வகுப்புகளுக்கும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை, ராஜவீதி துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "இணையவழி கற்றல் முறையினாலும், புதிய ஆசிரியர்கள், வகுப்பறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பாடங்களை கவனிக்கின்றனர். நோடல் மைய பள்ளியில் இருந்து, ஆசிரியர்கள் வாயிலாக நடத்தப்படும் பாடத்தை, மற்ற பள்ளி மாணவர்கள் கவனிக்க முடிவதோடு, புரியாத பகுதிகள் குறித்து கேள்விகள் எழுப்பலாம்.
இதற்கு, மற்ற நான்கு பள்ளி மாணவர்களும், வெப் கேமரா முன்னிலையில், V எழுத்து வடிவத்தில் அமர்ந்திருக்க வேண்டும். ஒரே சமயத்தில், குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் வரை, விவாதத்தில் பங்கேற்கலாம்; மற்ற மாணவர்கள் அதை கவனிக்க முடியும். இப்புது முயற்சியால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என இரு தரப்பினருக்கும், புதுவிதமான கற்றல் அனுபவம் கிடைக்கிறது," என்றனர்.

வாசிப்புத்திறனை அதிகப்படுத்த தினம் 2 மணிநேரம் சிறப்பு வகுப்பு: பள்ளிக் கல்வித்துறை

சென்னை: "அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களிடையே வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும் 2 மணி நேரம் கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்" என தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது, கிராமப்புற மாணவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திருப்தியில்லை
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் (எஸ்.எஸ்.ஏ.,), ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து ஆய்வு நடத்தியது. இதன் முடிவு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏற்கனவே தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும், கூடுதலாக சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. துறையின் உத்தரவு அடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி அனுப்பிய சுற்றறிக்கையில், "ஆசிரியர்கள், சுழற்சி அடிப்படையில், தினமும் கூடுதலாக 2 மணி நேரம் சிறப்பு வகுப்பை நடத்தி, மாணவர்களின் வாசிப்புத் திறனை, குறிப்பாக ஆங்கில வாசிப்புத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முதன்மைக் கல்வி அலுவலர்களின் இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், நடைமுறை ரீதியாக கிராமப்புற மாணவர்களுக்கு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக தலைவர், தியாகராஜன் கூறியதாவது: கூடுதல் வகுப்பு எடுக்க, நாங்கள் தயார். தற்போது கிராமப்புறங்களில் காலை 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, மாலை 4:30க்கு முடிகிறது. தற்போதைய உத்தரவால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், காலை 8:30 மணிக்கே, பள்ளிக்கு வர வேண்டும். மாலையில், 5:30 மணி வரை வகுப்பில் இருக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள், காலையில் சாப்பிடாமல் கூட பள்ளிக்கு வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து, பஸ்கள் மூலமாக வருகின்றனர்.
இருட்டிவிடும்
எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மிகவும் சிறியவர்கள். இவர்கள், காலை 8:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, பள்ளியில் இருந்தால் சோர்வடைவர். மேலும் காலை 7:00 மணிக்கு கிளம்பினால்தான், 8:30 மணிக்கு பள்ளிக்கு வர முடியும். அதேபோல் மாலையில் வீட்டுக்குச் செல்ல இருட்டிவிடும்.
இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் தெரியாமல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பிக்கின்றனர். கூடுதல் வகுப்பு நடத்தியே தீர வேண்டும் எனில், இரு வேலைகளிலும், மாணவர்களுக்கு சிற்றுண்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.

2014-15ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேர்நிலைப்பள்ளிகளின் பட்டியல்





9/22/2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது.
இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது

மானாமதுரை வட்டாரத் தேர்தல் முடிவுகள்

21.9.2014 அன்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக திருப்புவனம் வட்டாரச்செயலாளர் திரு.சத்தியேந்திரன் அவர்களும், துணை ஆணைளாயராக சிவகங்கை வட்டாரச் செயலாளர் திரு.குமரேசன் அவர்களும் பங்கேற்று தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்தனர்.

இதில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்

தலைவர்:         திரு. இரமேஷ்குமார்

துணைத்தலைவர்கள்:  திருமதி.செல்வராணி, திருமதி.ஞானஜெப ஜோதி, திரு.சூசைமாணிக்கம்

செயலாளர்: திரு.தங்கமாரியப்பன்

துணைச்செயலாளர்கள்: திரு.கண்ணன், திரு.நீலத்துரை, திருமதி.மரியசெல்வம்

பொருளாளர்:     திரு.வேலாயுதம்

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்:  திரு.இரவிக்குமார்

தேரந்தெடுக்கப்பட்ட பெறுப்பாளர்களின் இயக்கப்பணி சிறக்க வாழ்த்துகிறோம்.





பள்ளிகளில் புரியாத பாடங்களை அனிமேஷன் படங்கள் மூலம் புரியவைக்கும் முயற்சி!

சென்னை: அல்ஜீப்ரா, அணு அமைப்பு மற்றும் இலக்கணம் உள்ளிட்ட பாடங்களை, மாணவர்களுக்கு புரியும்படி விளக்கும் வகையில், அனிமேஷன் படங்களை, தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கவுள்ளனர்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: அறிவியல், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றிலுள்ள கடினமான பகுதிகளை, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் படியாக, அனிமேஷன் படங்களாக மாற்றுவதற்கு, தொழில்நுட்பத் திறன்வாய்ந்த 120 ஆசிரியர்களை, தமிழக பள்ளிக் கல்வித்துறை கண்டறிந்துள்ளது.
இதுதொடர்பாக பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்கள், டிஜிட்டல் நூலகத்தில், ஆதார வளங்கள் மற்றும் அனிமேஷன் படங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இதிலிருந்து, பிற ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வகுப்பறையில் பயன்படுத்துவார்கள்.
பாடத்தின் கடினமான பகுதிகளை, அனிமேஷன் மூலமாக விளக்கும்போது, பள்ளி மாணவர்களின் ஆர்வம் இயல்பிலேயே அதிகரித்து, அவர்கள் தங்களின் பாடப் பகுதிகளை எளிதாக புரிந்து கொள்வார்கள்.
காந்தப் புலங்கள், அல்ஜீப்ரா, மேட்ரிக்ஸ் உள்ளிட்ட பலவிதமான பாடப் பகுதிகள் அனிமேஷன் முறையில் மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம், அல்ஜீப்ரா என்பது புரிந்துகொள்வதற்கு கடினமான ஒன்று என்ற கருத்து உடைபடும்.
ஆசிரியர்களால் உருவாக்கப்படும் அனிமேஷன் அம்சங்கள், Educational Content Server என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த ஆண்டில் மட்டும், டிஜிட்டல் நூலகத்திற்காக 10 ஆயிரம் உள்ளடக்கங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"அடிப்படைவசதிகள் இல்லா பள்ளிகளை கண்காணிக்காத கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை"

ராமநாதபுரம்: அடிப்படைவசதிகள் இல்லா பள்ளிகளை கண்காணிக்காத கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்ட மெட்ரிக் பள்ளிகளில் அங்கீகாரம், அடிப்படை வசதிகள், கல்வி தரம் குறித்து மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் ஆய்வு செய்தார். இதன்பின் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது: அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கு கல்வித்துறை சார்பில் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது. இந்நிதியின் மூலம் கூடுதல் வகுப்பறைகள், உபகரணங்கள், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளை நிர்வகித்து கொள்ள வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இது போல் நிதி வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் உள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கிறது.
அங்கீகாரமில்லா மெட்ரிக் பள்ளிகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பாத முதன்மை கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 

அங்கீகாரம் பெறாத 316 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்

கோவை: கோவை மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத, 316 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியின் உத்தரவின் பேரில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், நர்சரி மற்றும் பிரைமரி, விளையாட்டுப் பள்ளிகளில், தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நடத்தப்படும் பள்ளிகளுக்கு, சுகாதார சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு சான்று, கட்டட உரிமை சான்று பெற்றிருக்க வேண்டும்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நலனுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. கடந்த மே மாதம் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதி பெறாத 49 பள்ளிகள் மூடப்பட்டன. தொடர் ஆய்வில், இதுவரை 316 பள்ளிகள் அங்கீகாரம் பெறாதது தெரியவந்துள்ளது. இப்பள்ளி நிர்வாகத்தினருக்கு முதற்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், "பள்ளிகளில் உரிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று, அரசு சார்பிலும், கல்வித்துறை சார்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பள்ளிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து, தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். அதை கடைபிடிக்காத பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து வருகிறோம்.
இதுவரை 316 நர்சரி, பிரைமரி மற்றும் விளையாட்டுப் பள்ளிகளுக்கு, முதற்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பதிலளிக்க, 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில், இரண்டாம் கட்ட நோட்டீஸ், அதற்கு பின் மூன்றாம் கட்ட நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு, முறையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஆசிரியர் நியமனம் வழக்கு தடை நீங்கியது.

TET சம்பந்தமான வழக்குகள்  அனைத்தும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. இதனால் ஆசிரியர்கள் பதவியேற்பதில் உள்ள தடை நீங்கியதாக தெரிகிறது.

பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளி

ஈரோடு: மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி பஞ்.,- சாமிநாதபுரம் புதூரில் யூனியன் நடுநிலை பள்ளி செயல்படுகிறது. 260 பேர் பயில்கின்றனர். கிராமப்புற பள்ளி என்பதால், பெரும்பாலும் விவசாய கூலிகள், தொழிலாளர்களின் குழந்தைகளே இங்கு படிக்கின்றனர்.
ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆங்கில மீடியத்தில் தலா 30 பேரும், ஆறு முதல் எட்டு வகுப்பு வரை 117 பேரும் படிக்கின்றனர். ஆறாம் வகுப்பில் தமிழ், ஆங்கில மீடியம் உள்ளன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் வகுப்பறை உரையாடல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழில் பேச துவங்கினால், சக மாணவ மாணவியரே, ஆசிரியரிடம் காட்டி கொடுத்து விடுகின்றனர். நன்கு கற்றுணர வேண்டும் என்ற நோக்கில் பேச்சு, எழுத்து, படிப்பதில், அனைத்துமே ஆங்கிலத்தில் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து பள்ளி ஆங்கில ஆசிரியை செல்வி மணியம்மை கூறியதாவது: மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளி, மாணவ, மாணவியரை ஆங்கிலம் பேச வைத்துள்ளோம். ஆங்கில அறிவை மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளிலும் சிறப்பாக கற்பிக்க இயலும் என்பதை, வெளிகாட்டும் விதமான முயற்சி இதுவாகும்.
தற்போது படிப்பது, எழுதுவது, பேசுவது, புரிந்து கொள்வது மட்டுமின்றி, ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியருடன் உரையாடுகின்றனர். துவக்கத்தில்தான், ஆங்கிலம் குறித்த தயக்கம் இருந்தது. மெல்ல, மெல்ல ஓரிரு வார்த்தைகளாக பேச, எழுத, படிக்க துவங்கினர். 2012 முதல் ஆங்கிலம் பிரதானமாக்கப்பட்டது.
இதனால், மாணவர்களிடையே பீதி, தயக்கம் இருந்தது. ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பு கவனம் செலுத்தியதால், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தினமும் உணவு இடைவேளையின்போது, 20 நிமிடம், வகுப்பறையில் தினமும் 10 நிமிடம் ஆங்கிலத்தில் உரையாடுவது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் குறிப்பிட்ட நாட்களே, ஆங்கில வகுப்புகள் உள்ளன. அவற்றில் முழுமையாக ஆங்கில உச்சரிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்பது துவக்கத்தில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது மாணவர்களே அதை நடைமுறையாக்கி கொண்டுள்ளனர்.
பதில் அளிக்க தெரியாவிடில், ஆசிரியர்களிடமே விளக்கம் கேட்கின்றனர். ஓரிரு முறை சொல்லி கொடுக்கும் பட்சத்தில், பழக்கி கொள்கின்றனர். ஓரிரு வார்த்தைகள் பேசுபவர், சிறு கதைகள், மொழி பெயர்ப்பு அளிக்கப்படுகிறது. எளிதான வாக்கியம் அடங்கிய கதை புத்தகங்கள், எஸ்.எஸ்.ஏ., சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளியில், இங்கிலீஷ் லிட்டரரி கிளப் 2012ல் துவக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிளப் கூடும். அப்போது நாடகம், பாட்டு, பேச்சு, சிறு உரையாடல்களை ஆங்கிலத்தில் மாணவர்கள் மேற்கொள்கின்றனர். ஒன்றாம்  வகுப்பு  முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கிளப் உறுப்பினர்களாக உள்ளனர். ஆங்கில பயன்பாடு காரணமாக பயம் நீங்கியுள்ளது. மாறாக ஆங்கிலத்தில் உரையாடுவதை மாணவர்கள் பழக்கப்படுத்தி கொண்டுள்ளனர்.
கிளப் நிகழ்ச்சிகளில் ஆங்கில திறனை வெளி காட்டலாம் என்ற தன்னம்பிக்கை அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. 80 சதவீத மாணவர்கள் கிளப் உறுப்பினராக உள்ளனர். கிளப்பில் கதை, கவிதை, கட்டுரை போட்டி ஆங்கில பயன்பாட்டுக்கு உதவிடுவதாக அமைந்துள்ளது என்றார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளியிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலத்தில் உரையாட மேற்கொண்டுள்ள முயற்சி, பெற்றோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பள்ளிகளில் கொடுத்து மகிழும் வாரம்


வாழ்த்துகிறோம்!!!

இன்று பிறந்தநாள் காணும்  TNPTF கல்லல் வட்டாரப் பொருளாளர் திரு.ஆரோக்கிய லூயிஸ் லெவே அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது. வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள 9487412927

9/19/2014

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப் பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப் பிக்க கால வரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையி னர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவி களுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த சிறுபான் மையின மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம், www.momascholarship.gov.in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, தங்கள் கல்வி நிலையங்களுக்கு அனுப்பலாம்.

பி.எட்., பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இணைக்க வேண்டும்: ஆசிரியர் கல்வியியல் பல்கலை

கோவை: பி.எட். கல்வி பயில, புரவிஷனல் சான்று கட்டாயமாக இணைக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டு பி.எட்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் ஜூலையில் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், முதல் முறையாக ஆன்லைன் முறையிலான விண்ணப்ப வினியோகம் அறிமுகம் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும், 29 மையங்களில் விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்டன.
தொடர்ந்து, சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய நான்கு மையங்களில், ஆக., 5 முதல் 9ம் தேதி வரை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. பெரும்பாலான கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் நடந்து வருகிறது.
தனியார் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையும் நடந்துள்ள நிலையில், பல மாணவர்கள், தாங்கள் படித்த படிப்புக்குரிய புரவிஷனல் சான்று இணைக்காமல், மதிப்பெண் பட்டியல் மட்டுமே அளித்துள்ளனர். மாணவர்கள் பயின்ற கல்லுாரியின் பல்கலைக்கழகம், புரவிஷனல் சான்று அளிக்காத நிலையில், சான்று இல்லாத மாணவர்களை சேர்க்க வழி உள்ளதா என, தொடர்புடைய கல்லுாரிகள், ஆசிரியர் பல்கலையை கேட்டுக்கொண்டுள்ளது. உயர்கல்வி சட்ட விதிகளின்படி, புரவிஷனல் சான்று இல்லாத மாணவர்களை சேர்க்கக்கூடாது என பி.எட்., கல்லுாரிகளுக்கு, பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வியியல் பல்கலை விதிகளின்படி, புரவிஷனல் சான்றிதழ் மாணவர் சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது; கட்டாயம் இணைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். பி.எட்., பயில விரும்பும் மாணவர்களுக்காக, பட்டம் முடித்தவர்களுக்கு விரைவில் புரவிஷனல் சான்று வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சில பல்கலைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்றார்.
அரசு கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஒருவரிடம் கேட்டபோது, "அனைத்து பல்கலையும் ஒரே சமயத்தில் புரவிஷனல் சான்றிதழ்கள் வழங்குவதில்லை. எனவே, முதலில் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது; புரவிஷனல் சான்றிதழ் கிடைத்தவுடன் வழங்குவதாக, மாணவர்களிடம் கடிதம் எழுதி வாங்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, பட்டம் முடித்த மாணவர்களுக்கு பிற பல்கலைகள் உடனடியாக புரவிஷனல் சான்று வழங்க வேண்டும்" என்றார்.

பதிவேடுகளுக்கு செலவிடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

குஜிலியம்பாறை: அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை செலவிடுகிறது. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், பள்ளி பராமரிப்புக்கான பள்ளி பதிவேடு, ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு, மாணவர் வருகை பதிவேடு, ஊதிய பதிவேடு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பதிவேடு, வாசித்தல் திறன் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, இலவச பொருள் வழங்கும் பதிவேடு, மாணவர் திறன் பதிவேடு, தணிக்கை பதிவேடு, காலநிலை அட்டவணை என 64 வகையான நோட்டுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி பராமரிக்கின்றனர்.
மேலும், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகளை, ஆண்டுக்கு மூன்று முறை, வாடகை வாகனம் பிடித்து, கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர்களுக்கு வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் நிறைய உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும், என்றனர்.

மாணவர்களுக்கான இலவச காலணி திட்டத்தில் குளறுபடி

மாணவர்களுக்கு, வழங்கியுள்ள இலவச காலணிகள், பழைய அளவை வைத்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதால், அவை, மாணவர்களுக்குப் பொருந்தாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகையான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சீருடையில் ஆரம்பித்து, காலணி, புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, ’லேப்டாப்’ மற்றும் மலைப்பிரதேச மாணவர்களுக்கு, கம்பளிச் சட்டை வரை, திட்டம் நீள்கிறது. இதில், புத்தகப் பையும், காலணியும் ஆண்டுதோறும் வழங்கப்படுவது இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில், புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு, அனைத்து திட்டங்களும் வழங்கப்படுவதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக அரசு செயல்படுத்தும், 14 வகை திட்டங்களில், இலவச காலணி வழங்கும் திட்டம் மட்டும் குளறுபடியாக நடந்து வருகிறது.
கடந்த, 2011 - 12ல் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்களிடம், கால் அளவு எடுக்கப்பட்டது. 2012 - 13ம் கல்வி ஆண்டில், முதல் முறையாக, 78.82 லட்சம் மாணவர்களுக்கு, 104.15 கோடி செலவில், இலவச காலணிகள் வழங்கப்பட்டன. சரியாக கால் அளவு எடுக்காததால், பொருந்தாத காலணிகளை போட வேண்டிய நிலை, மாணவர்களுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக, இந்த ஆண்டு, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் 80 லட்சம் மாணவர்களுக்கு, இலவச காலணி வழங்கப்பட உள்ளது. இதற்காக தயாரான காலணிகள், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. 2011 - 12ல் எடுத்த அளவின்படியே, இப்போதும் காலணிகள் வந்திருப்பதை கண்டு, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவை, மாணவர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், காலணியின் தரமும் சிறப்பாக இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ’பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள காலணிகளை, மாணவர்களுக்கு வழங்க வேண்டாம்’ என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இலவச திட்டங்களை செயல்படுத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இலவச சீருடை, பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம் ஆகியவை மட்டும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது, காலணிகள் வந்துள்ளன. ஆனால், ’மாணவர்களுக்கு வழங்க வேண்டாம்’ என, எங்களுக்கு, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான காரணம் தெரியவில்லை. காலணியின் தரம், உயர்வாக உள்ளது எனக் கூற முடியாது. தனியார் கடையில், 1,000 ரூபாய் கொடுத்து வாங்கும் காலணியே, ஆறு மாதம் தான் வருகிறது. எனவே, அரசு இலவசமாக கொடுக்கும் காலணியின் தரத்தை ஆய்வு செய்ய தேவை இல்லை. இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.
காலணி வழங்க தடை விதித்தது ஏன்?
மாணவர்களுக்கு, காலணி வழங்க, தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து, பாடநூல் கழக வட்டாரம் கூறியதாவது: கடந்த முறை, தனியார் நிறுவனத்திடம், காலணிக்கான, ’ஆர்டர்’ தரப்பட்டது. இதனால், ஏதாவது குளறுபடி ஏற்பட்டிருக்கலாம். இம்முறை, மத்திய அரசு நிறுவனங்களான, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான, ’சிப்பெட்’ மற்றும் இருங்காட்டுகோட்டையில் உள்ள மத்திய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான, எப்.டி.டி.ஐ., ஆகியவற்றிடம் வழங்கப்பட்டன.
இதனால், தரமான முறையில், காலணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனினும், காலணியின் தரத்தை, நிபுணர் குழு ஆய்வு செய்து, ’தரமாக உள்ளது’ என, தெரிவித்த பிறகே, மாணவர்களுக்கு வழங்கப்படும். இதனால் தான், மாணவர்களுக்கு காலணி வழங்க வேண்டாம் என, தெரிவித்துள்ளோம். தரத்தில் குறை இருந்தால், அனைத்து காலணிகளையும், கண்டிப்பாக திருப்பி அனுப்பி விடுவோம். ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களின் கால் அளவை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் வயதின் அடிப்படையில், கால் அளவு எவ்வளவு இருக்கும் என்பது, அந்த துறை சார்ந்தவர்களுக்கு தெரியும். அதன்படி காலணி தயாரிக்கப்பட்டுள்ளது.அனைத்து இலவச திட்டங்களும், நவம்பர் இறுதிக்குள் மாணவர்களை சென்றடைய, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.

"தாய்மொழியே உயர்வுக்கு வழி"- இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு(STFI) திண்டுக்கல்லில் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ உரை.

திண்டுக்கல்லில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஞாயிறன்று நடந்த சிறப்புக் கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ பேசியதாவது:மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு சமீபகாலமாக மொழித்திணிப்பு வேலைகளில் ஈடு பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகிறார்கள். தாய் மொழிக்கல்விதான் ஒரு மாண வனை அறிவுடையவனாக, திறன் மிக்கவனாக உயர்த்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தி பேசும் மாணவர்கள் தங்களுக்கு தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை மட்டும் பயின்றால் போதும். இந்தி தவிர பிற மொழி பேசும் மாணவர்கள் தங்களது தாய்மொழியோடு, இந்தி யையும், தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும் சேர்த்து 3 மொழி களை கற்க வேண்டியுள்ளது. தமிழ கத்தில்தான் பள்ளி மாணவன் தமிழ் மொழியை படிக்காமலேயே பள்ளிப் படிப்பை முடித்துச் செல்ல முடியும்.

இதுபற்றி சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது அமைச்சர்கள் கொதிப்படைகிறார்கள். உண் மையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? இது உண்மைதானா என்று ஏன் ஆய்வு செய்யக்கூடாது?. கர்நாடகா மாநிலத்தில் 14 வயது வரை ஒரு மாணவன் கட்டாயமாக கன்னட மொழியை கற்க வேண்டும் என்றுஅந்த மாநில அரசு கட்டாயப்படுத் துகிறது. அதற்கான சட்டமும் அமலாகி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு சட்டம் இல்லை. அரசுப் பள்ளிகளில் உள்ளது போன்ற விளையாட்டு மைதானங்கள் தனியார் பள்ளி களில் இல்லை. அரசுப் பள்ளி களை மேம்படுத்த சுற்றுச் சுவர், கட்டிடங்கள் கட்டி, நவீன வசதி கள் கொண்ட கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தரமான கல்வி என்பதை உத்தரவாதமாக வழங்கினால் தனியார் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேரும் வாய்ப்பு உள்ளது.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள இந்த சூழ்நிலையில் தனியார் பள்ளி களில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்குப் பயந்து தற்போது மாண வர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளிகளிலேயே சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த முன்வர வேண்டும். அதற்கு தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன் பேசியதாவது:நள்ளிரவில் இந்தியா சுதந் திரம் பெற்றது. இந்திய நாடு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் பெற வேண்டும் என்று யாராவது கேள்விஎழுப்பினார்களா? இல்லை. நள்ளிரவில் சுதந்திரம் பெற்றால் தான் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று ஒரு ஜோதிடர் கூறியதால் கிடைத்தது. அதற்காக தில்லியில் ஹோமம் எல்லாம் வளர்த்து, பூஜைகள் எல்லாம் செய்துதான் சுதந்திரம் பெற்றார்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டில் நேரு போன்ற மதச்சார்பற்ற ஜனநாயக எண்ணம் கொண்டவர்களால் கூட இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. இன் றைக்கு மதவெறி பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது.

நாட்டில் உள்ள அனைத்து கல்வி முறைகளிலும் குருகுல கல்வி முறைதான் சிறந்தது என்று கூறுகிறார்கள். திண்ணைப் பள்ளி நடத்தப் போவதாக கூறுகிறார்கள். திண்ணைப் பள்ளிகள் பெரும்பாலும் ஆதிக்க சமூகத்தார் உள்ள பகுதிகளில் தான்இருக்கும். அங்கே தலித் மக்கள்ஒடுக்கப் பட்ட மக்கள் அந்த பள்ளியில் சேர்ந்து பயில முடியாது. அரசுப் பள்ளிகளில் தான் தமிழ் உள்ளது. மாணவர்களிடம் இருந்துநாம் கற்றுக் கொண்டு மாணவர் களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். மதிப்பெண்கள் போடும் கல்விமுறையை மாற்றி அமைக்க வேண்டும். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் அகில இந்திய பொதுச் பொதுச் செயலாளர் க.இராஜேந்திரன் பேசியதாவது:2009ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இலவசமாக கட்டாய கல்வியை அமலாக்கச் சொல்கிறது. ஆனால் சட்டம் முழுமையாக அமலாகவில்லை. துவக்கக் கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்றுகோருகிறோம்.

அதனை எந்த மாநில அரசும் அமலாக்க முனைவ தில்லை. மத்திய நிதியில் கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று கோத்தாரி கமிசன் கூறுகிறது. எந்த மத்திய அரசாங்கமும் 4 சதவீதத்தை தாண்டி நிதி ஒதுக்கு வதில்லை. இங்கே கல்வி வியா பாராம் ஆக்கப்பட்டுள்ளது. கேரளா, மிசோரம் மாநிலங்களுக்கு அடுத்து திரிபுரா முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் மாணிக்சர்க்கார் கூறும் போது எங்கள் மாநிலம் 95.1 சதவீதம் எழுத்தறிவு பெற்றுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறிவிடும் என்று கூறினார். நிதி பற்றாக்குறை உள்ள.

மலைவாழ் மக்கள் நிறைந்த மாநிலமான திரிபுரா கல்விக்கு தேவையான நிதியை ஒதுக்கி இந்த சாதனையை செய்யும் போது ஏன் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இது சாத்தியப்படவில்லை. மாநில அளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், பாண்டிச்சேரி ஆசிரியர் சங்கம் ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.

G.O.(MS) No.18 Dated 22.8.2014


தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.

இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும். இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில் சமர்பித்துவிட்டு, எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பள பட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்) கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியதாக இருக்கும். இப்புதிய முறை தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் கல்வித்துறை உட்பட இதர துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் முதல் 7% அகவிலைப்படி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பித்தது மத்திய நிதி அமைச்சகம்


வருமானம் வரி பிடித்தம் (E-TDS) - தமிழக அரசு வழிகாட்டல்


வருந்துகிறோம்!!!

சிங்கம்புணரியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை நிறுவியவர்களில் முதன்மையானவரும், முன்னாள் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினரும், எஸ்.செவல்பட்டி நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியருமான தோழர் ஆரோக்கிய செல்வராஜ் அவர்களின் தாயார் திருமதி.லில்லி புஷ்பம் அவர்கள் இன்று(19.9.2014) தன் இன்னுயிரை நீர்த்தார். அம்மையாரின் நல்லடக்கம் நாளை காலை 10.00 மணியளவில் காரைக்குடியில் தோழரின் மூத்த சகோதரரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.  அம்மையாரின் மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
துயரத்தை பகிர்ந்து கொள்ள
திரு.செல்வராஜ் அவர்களின் செல்லிடபேசி: 9443442555

9/18/2014

தோழமையுடன் அழைக்கின்றோம்.....


பி.எட் மாணவர் சேர்க்கை பல்கலை புது கட்டுப்பாடு

நெல்லை: பிஎட் கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இணைக்க வேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பட்டப்படிப்பை தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு பிஎட் ஒரு வருட பட்டப்படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு (2014-15) கல்வி ஆண்டிற்கான பிஎட் படிப்புக்கு பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கி உள்ளன. தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு;ஒதுக்கீட்டுப்பிரிவு மாணவர் சேர்க்கையும் நடந்துள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடத்தப்பட்டது. கலந்தாய்வு மூலம் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து, சேர்ந்துள்ளனர். பிஎட் கல்வியில் சேர்ந்துள்ள பல மாணவர்கள் தாங்கள் படித்த பட்டப்படிப்புக்கு உரிய புலச்சான்று (புரவிஷனல் சர்டிபிகேட்) இணைக்காமல் மதிப்பெண் பட்டியல் மட்டும் அளித்துள்ளனர்.

இது குறித்து பல்வேறு பிஎட் கல்லூரிகளில் இருந்து கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில் மாணவர்கள் பயின்ற கல்லூரியின் பல்கலைக்கழகம் புலச்சான்று அளிக்காத நிலையில் புலச்சான்று இல்லாத மாணவர்களை சேர்க்க வழி உள்ளதா என கேட்டுள்ளனர். உயர்கல்வி சட்ட விதிகளின்படி புரவிஷனல் சான்று இல்லாத மாணவர்களை சேர்க்கக்கூடாது என கல்வியில் பல்கலைக்கழகம் உத்தரவிட்டு, பிஎட் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது: பிஎட் கல்வி என்பது ஓராண்டில் படித்து முடிக்கக்கூடியது.
கல்வியியல் பல்கலைக்கழக விதிகளின்படி புலச்சான்று மாணவர் சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதை கட்டாயம் இணைக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பிஎட் பயில விரும்பும் மாணவர்களுக்காக பட்டம் முடித்த மாணவர்களுக்கு புலச்சான்று விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சில பல்கலைக்கழகங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

NHIS அடையாள அட்டை பெற துரித நடவடிக்கை மேற்கொள்ள நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்


9/17/2014

இனிமேல் கல்வியியல் பட்டப்படிப்புகள் இரண்டு ஆண்டுகள்


ஆசிரியர் நியமனத்தில் மீண்டும் சீனியாரிட்டி; அரசின் திடீர் உத்தரவால் புது குழப்பம்



ET வழக்கு :5% தளர்வு G.O 71 குறித்த விசாரணை - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

G.O 71 க்கு எதிரான வாதம் 16.9.14 காலை 11 அளவில் வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.
அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது .அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. இதற்கு மேல் வாதங்கள் கிடையாது.மேலும் யாரேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால் எழுத்து பூர்வமாக மட்டுமே அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

‘ஆசிரியர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்பது நன்னடத்தை விதிமுறை’

மதுரை: ‘ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது,‘ என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தொடக்க கல்வித் துறையில் குழுக்கள் அமைத்து மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், வாசிப்பு மற்றும் எழுதும் திறன் ஆய்விற்கு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடக்க கல்வியில் மாணவர்கள் கல்வித் திறன் குறைந்து வருகிறது என்ற தகவல் தவறானது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ’மாணவர் அடைவு திறன்’ ஆய்வில், குறிப்பிட்ட வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் ’ஸ்மார்ட் கிளாஸ் ரூம்’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி கல்வி போதிக்கப்படுகிறது. இதை பின்பற்றாத பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள். ஆசிரியர்கள், கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை நான் பிறப்பிக்கவில்லை.
அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது தான், என்றார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.
பின்னணி என்ன?
கடந்த சில வாரங்களுக்கு முன் தொடக்க கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ’கல்வி அலுவலங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது,’ என உத்தரவிடப்பட்டது. இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
செப்.,10ல் மாநில அளவில், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்நிலையில், சுற்றறிக்கை குறித்து இளங்கோவன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் குறைவு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: அரசு ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிகமானோருக்கு, பாடப் புத்தகத்தில் வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு, பொதுத்தேர்வுகளில், மாநில அளவில் அதிக இடங்களை பிடித்த நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், வாசிப்புத் திறன் மிக குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.ஏ., சார்பில், பல வகையான ஆய்வுகள், பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், எட்டாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாசிப்புத் திறன் குறித்து, கடந்த ஆண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.
கல்வித்துறை இணை இயக்குனர்கள் குழு, மாவட்ட வாரியாக சென்று, தமிழ் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்தது. அதில், பெரு நகரங்களில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர், வாசிக்கத் திணறி உள்ளனர்.
இந்த ஆண்டு, பொதுத்தேர்வில், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மாணவர்கள்தான், மாநில அளவில், அதிக மதிப்பெண்களை பெற்று ரேங்க் பெற்றனர். இந்த மாவட்ட மாணவர்கள் தான், வாசிப்புத் திறனில், மிகவும் பின் தங்கியிருப்பதாக, ஆய்வில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வு முடிவின் அடிப்படையில், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, ஒரு சுற்றறிக்கையை இயக்குனர் அனுப்பி உள்ளார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், முறையாக, அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, மாணவர்களை, பாடப் புத்தகங்களை வாசிக்கச் செய்து, அவர்களின் திறனை அறிய வேண்டும். பாடப் புத்தகங்களை வாசிக்க, மாணவர்கள் திணறினால், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரிடம், விளக்கம் கேட்டு பெற வேண்டும் எனவும், இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.
பிரச்னைக்கு அரசுதான் காரணம்!
மாணவரிடையே, வாசிப்புத் திறன்குறைவாக இருப்பதற்கு, ஆசிரியர், சரியாக பாடம் நடத்தாததுதான் காரணம் என, அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால், இதுகுறித்து அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை, பிரச்னைக்கு அரசுதான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்.
அவர் கூறியதாவது: தொடக்கக் கல்வித்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 ஆயிரம் பள்ளிகள், இரு ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளாக உள்ளன; இது உண்மை. இரு ஆசிரியரில், ஒரு ஆசிரியர், பணியிட மாறுதல் பெற்றுச் சென்றால், அந்த பணியிடத்தை உடனடியாக நிரப்புவது இல்லை.
* இருவரில், ஒருவர் விடுமுறை எடுத்தாலும், ஒரு ஆசிரியர்தான் இருப்பார். ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தது 20 மாணவர்களாவது இருப்பர். இவ்வளவு பேருக்கும், ஐந்து பாடங்களை, ஒரே ஆசிரியர் எப்படி எடுக்க முடியும்?
* இரு ஆசிரியர் பள்ளியாக இருந்தாலும், ஐந்து பாடங்களை நடத்த வேண்டி உள்ளது.
* ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 3,800 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஆனால் 1,650 ஆசிரியர் பணியிடம் மட்டும் தற்போது நிரப்பப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள், இரு ஆசிரியர் பள்ளிகளுக்கு வழங்கவில்லை.
* இதுபோன்ற நிலை இருந்தால், மாணவர்களுக்கு வாசிப்பு பிரச்னை; எழுதுவதில் பிரச்னை என, பல பிரச்னைகள் வரும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்

சமச்சீர் பாடத்தை ஆடியோ சிடியாக தயாரித்த காரைக்குடி மாணவிகள்

காரைக்குடி: ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான  சமச்சீர் பாடத் திட்டத்தின், முப்பருவ பாடத்திட்டத்தில், ஒரு பருவ பாடத்தை, கற்றுணர்ந்து, அதை ஆடியோ சிடியாக தயாரித்துள்ளனர் காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி மாணவிகள்.
கருவாய் உருவாகி, உருவாய் அரங்கேறி, பருவங்கள் பல தாண்டி, வருங்கால வாழ்வை நோக்கி ஒவ்வொருவரும் நடை பயில்கிறோம். லட்சியங்கள் கைக்கு எட்டும் துாரத்தில், இருந்தும் அலட்சியப்படுத்துகிறோம். தடைகள் ஓராயிரம், சாதிக்க தன்னம்பிக்கை ஒன்றுதான் பேராயுதம் எனக் கூறி, தன்னம்பிக்கை ஆயுதத்தை மட்டும் கையில் வைத்து, பார்வையற்ற மாணவர்களுக்காக 20 நாட்கள் கஷ்டப்பட்டு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை, சாதனைக்கு சாதனம் ஒரு பொருட்டல்ல எனக் கூறி, மொபைல் வழி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவுசெய்து, சி.டி.யாக மாற்றி, அதை திருப்பத்துார் டி.இ.எல்.சி., சிறப்பு பள்ளியில் உள்ள, பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாக வரும் 19-ம் தேதி வழங்க உள்ளனர் காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரியை சேர்ந்த மாணவிகள்.
குரலில் சிறந்த 80 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடத்திட்டங்களை, கணிதத்தை தவிர, மற்ற பாடங்களை நான்கு குழுவாக பிரிந்து படித்து புரிந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து, அவற்றை ரிக்கார்டிங் செய்ய, தங்கள் மாணவிகளிடம் உள்ள சிறந்த மொபைல்களை தேர்வு செய்து, ஒரு மாணவி புத்தகத்தை வாசிக்க, மற்றொரு மாணவி, மொபைலை பிடிக்க என ரிக்கார்டிங் தொடர்ந்தது. பறவைகளின் சத்தம், விலங்குகளின் சத்தத்தை அறிய, மாணவிகளே மிமிக்ரி கொடுத்தனர்.
மாணவிகள் தேவி அபிநயா கூறும்போது: "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு, மாடல்ல மற்றயவை" என்பது கல்வியின் சிறப்பை கூறும் திருக்குறள். ஒருவர் எல்லா செல்வம் பெற்றிருந்தாலும், கல்வி செல்வமே சிறந்த செல்வமாகும். அந்த வகையில், கல்லுாரி முதல்வர் ஹேமாமாலினி உதவியுடன், ஆங்கிலத்துறை தலைவர் அழகு மீனாள், ஆசிரியர்கள் சுந்தரி, சுதா, தாரகை ஆகியோர் தலைமையில், பார்வையற்ற மாணவர்களுக்காக, சமச்சீர் பாடத்திட்டத்தை, ஆடியோ சி.டி.,யாக பதிவு செய்துள்ளோம். ஒவ்வொரு கேள்வியும், பதிலும் இரண்டு முறை வாசிக்கப்படும். பாடத்தை புரிந்து கதை சொல்வது போலவும், பாடுவது போலவும், முழு மனதுடன் செய்துள்ளோம்.
தற்போது, அரசு பள்ளிகளில் வாசிப்பு திறன் குறைவாக உள்ளது. அந்த வாசிப்பு திறனை மேம்படுத்தவும், இந்த சி.டி.,யை பயன்படுத்தலாம். ஏற்கனவே நர்சரி படிப்புக்கான ஆடியோ சி.டி. தயாரித்து வெளியிட்டுள்ளோம். ஒரு வகுப்புக்குரிய தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தும், இரண்டரை மணி நேரம் ஓடும். இதற்கு டாக்கிங் புக் லைப்ரரி என பெயர் வைத்துள்ளோம், என்றார்.
முதல்வர் ஹேமாமாலினி கூறும்போது: செய்முறை பயிற்சியை, நோட்டில் எழுதி, ஆசிரியரிடம் காண்பித்து, தாங்கள் மட்டுமே வைத்து கொள்வதால் எந்த பயனும் இல்லை. படிக்கும் காலத்தில் பிறருக்கு உதவ வேண்டும். இன்றைக்கு என்ன தேவையோ அந்த ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். இன்றைய தேவைக்குரிய ஆராய்ச்சியே, நாளைய தேவையின் படிக்கட்டு. அதன் அடிப்படையில், பார்வையற்ற மாணவர்கள், சமச்சீர் கல்வியை சிரமமின்றி படிக்க, ஆடியோ சி.டி.யை எங்கள் மாணவிகள் தயார் செய்துள்ளனர். முதல் பருவம் மட்டுமே நிறைவேறியுள்ளது.
அடுத்த இரண்டு பருவங்களும் விரைவில்,சி.டி.யாக மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். அடுத்த பருவ சி.டி.,க்களை, ரெக்கார்டிங் சென்டரில் வைத்து தயாரிக்க முயற்சி செய்து வருகிறோம், என்றார். சமச்சீர் சி.டி., வேண்டுவோரும், தன்னம்பிக்யை பாராட்டுவோரும், 94889 49279 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் தாமதம்

மதுரை: ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இத்துறைக்கு உட்பட்ட துவக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு 1500 ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையால் ஐந்தாண்டுகளில் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை குறைகிறது.
ஒரு பள்ளியில் உள்ள ஆசிரியர், 40 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றுப் பணியாக செல்கிறார். மேல்நிலை பள்ளிகளில், தாவரவியல், விலங்கியல் பாடங்களை ஒரே ஆசிரியரும், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் பொருளியல் என மூன்று பாடங்களையும் ஒரே ஆசிரியரும் பல பள்ளிகளில் கற்பிக்கும் நிலையுள்ளது. ஆசிரியைகளை மாற்றுப்பள்ளிக்கு அனுப்புவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடக்க பள்ளிகளில் 75 ஆசிரியர் (11 மாற்றுத்திறனாளி பிரிவுக்கு) பணியிடங்கள், 249 பட்டதாரி ஆசிரியர்கள் (இதில் 111 பேர் பள்ளி கல்வித் துறைக்கு மாறுதல்), முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 33 பேர் ஒதுக்கீடு செய்ய மார்ச் மாதம் இத்துறையால் சிபாரிசு செய்யப்பட்டது. இதற்கான ஒதுக்கீடும் ஆகஸ்ட்டில் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பணி நியமனத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மாவட்ட தலைவர் சின்னப்பாண்டி கூறியதாவது: இத்துறையில் 6 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் இல்லை. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கிறது. பள்ளி கல்வியில், தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளில் 9 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இத்துறையில் சென்றாண்டு தரம் உயர்த்தப்பட்ட ஐந்து மேல்நிலை பள்ளிகளில் தலா 5 பணியிடங்களே ஏற்படுத்தப்பட்டன. அதிலும் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. கள்ளர் சீரமைப்பு துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, டி.ஆர்.பி., மூலம் ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

9/16/2014

TET தற்போதைய நிலவரம் (16.9.2014)

இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.
காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.எனவே 5% தளர்வு குறித்துயாரும் பயம் கொள்ள வேண்டாம்.
அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞ்சர்களிடமே முன் வைத்தார்.அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடைபிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள்.அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வாதங்கள் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

உதவி தலைமை ஆசிரியை அடித்ததால், அவமானம் அடைந்த 9ம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்தார்

பெரம்பூர் மதுரை மாடசாமி தெருவை சேர்ந்தவர் சுமதி (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரம்பூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். சுமதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் பள்ளிக்கு சென்றார். அப்போது, வகுப்பு ஆசிரியை ஏன் 2 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என கேட்டுள்ளார். அதற்கு உடல்நிலை சரியில்லை என சுமதி கூறியுள்ளார். உடனே, உதவி தலைமை ஆசிரியையிடம், மாணவியை அழைத்து சென்றார். அங்கு, பள்ளிக்கு ஏன் வரவில்லை என கூறி, உதவி தலைமை ஆசிரியை, ஸ்கேலால் சுமதியின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து வெளியே வந்த மாணவி, முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில், அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். உடனடியாக பள்ளி ஊழியர்கள், அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாய் மருத்துவமனைக்கு வந்தார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து, செம்பியம் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டி, எஸ்ஐ சையத் முபாரக் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவி சுமதியிடம் விசாரித்தனர். அதில், வகுப்பு ஆசிரியை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அடித்தார்.

பின்னர், உதவி தலைமை ஆசிரியையிடம் அழைத்து சென்றபோது, அவரும் ஸ்கேலால் அடித்தார். இதனால், அவமானம் அடைந்த நான் மாடியில் இருந்து குதித்தேன் என மாணவி போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி உதவி ஆசிரியர், வகுப்பு ஆசிரியை ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். ஆசிரியை, தலைமை உதவி ஆசிரியை அடித்ததால், மாடியில் இருந்த மாணவி குதித்த சம்பவம், மற்ற மாணவிகளின் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.<

28.9.2014 அரசு ஊழியர் சங்க மாவட்ட கட்டிடம் திறப்பு விழா - அனைவரும் பங்கேற்க TNPTF வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சிவகங்கை மாவட்ட கிளையின் மாவட்ட கட்டிடம் சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் 28.9.2014 அன்று காலை 10 மணிக்கு திறப்பு விழா காண இருக்கிறது. இரண்டு தளங்களை கொண்ட அக்கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அலுவலகமும் அங்கு செயல்பட உள்ளது. உழைக்கும் வர்கங்கள் ஒன்று கூட உள்ள நிகழ்வானது சிவகங்கை அரன்மணைவாசலில் பேரணியாக தொடங்கி மாவட்ட கட்டிடம் முன்பு நிறைவடைகிறது. அதன்பின் மாநிலப் பொறுப்பாளர்களால் கட்டிடம் திறக்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இருந்து ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுக்கிறது.  மாவட்ட கட்டிடம் திறந்த பின்னால் நமது மாவட்ட கிளையின் முகவரி புதிய அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. மாவட்ட கூட்டங்களும் இனிமேல் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். விழா சிறப்பாக நடைபெற வாழத்துக்கள்.